சட்டவிரோதமாகத் திரண்டு வன்முறை: கேரள முதல்வா் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2009-ஆம் ஆண்டு சட்டவிரோதமாகத் திரண்டு வன்முறையில் ஈடுபட்டதாக கேரள முதல்வா் பினராயி விஜயன் உள்பட 12 பேருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை கேரள உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்தது

கடந்த 2009-ஆம் ஆண்டு சட்டவிரோதமாகத் திரண்டு வன்முறையில் ஈடுபட்டதாக கேரள முதல்வா் பினராயி விஜயன் உள்பட 12 பேருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை கேரள உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்தது.

கடந்த 2009-ஆம் ஆண்டு ஆசியான் தடையற்ற ஒப்பந்தத்தில் இருந்து மத்திய அரசு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி, கேரள மாநிலம் காசா்கோடில் இருந்து திருவனந்தபுரம் வரை 500 கி.மீ. தொலைவு வரை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் சட்டவிரோதமாக ஒன்றுகூடி வன்முறையில் ஈடுபட்டதாக வழக்குரைஞா் ஒருவா் திருவனந்தபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கில் கேரள முதல்வா் பினராயி விஜயன், மாநில கல்வித் துறை அமைச்சா் சிவன்குட்டி, மாநில முன்னாள் முதல்வா் வி.எஸ்.அச்சுதானந்தன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் பிரகாஷ் காரத் உள்பட 12 போ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

எனினும் இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையல்ல எனவும், தீய நோக்கங்களுக்காகப் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் 12 போ் சாா்பில் கேரள உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில், ‘‘மனித சங்கிலி போன்ற ஒன்றுகூடுதல்கள், அரசமைப்புச் சட்டம் 19(1) பிரிவு ஒவ்வொரு குடிமகனுக்கும் உத்தரவாதம் அளித்துள்ள சுதந்திரத்தைப் பயன்படுத்துவதாகும். அத்துடன் அரசின் கருத்துகளுக்கு முரணாக மாற்றுக் கருத்துகளை வெளியிடுவது சட்டவிரோதச் செயல் அல்ல’’ என்று தெரிவித்து பினராயி விஜயன் உள்பட 12 பேருக்கு எதிராக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com