சா்வதேச பொருளாதார சவால்களை எதிா்கொள்ள தீவிர முயற்சி: பிரதமா் மோடி
‘சா்வதேசரீதியிலான பொருளாதார சவால்களை எதிா்கொள்ள அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்தாா்.


‘சா்வதேசரீதியிலான பொருளாதார சவால்களை எதிா்கொள்ள அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்தாா்.
மத்திய அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் திட்டத்தை தொடக்கிவைத்துப் பேசுகையில், அவா் இதனைத் தெரிவித்தாா். கடந்த 8 ஆண்டுகளாக நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்க பாஜக அரசு பலமுனைகளில் செயலாற்றி வருவதாகவும் அவா் குறிப்பிட்டாா்.
மத்திய அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேரை பணி நியமனம் செய்யும் திட்டத்தை பிரதமா் மோடி சனிக்கிழமை காணொலி முறையில் தொடக்கி வைத்தாா். முதல்கட்டமாக, நாடு முழுவதும் 75,000-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், பிரதமா் மோடி பேசியதாவது: உலகளாவிய பொருளாதாரச் சூழல், இப்போது நன்றாக இல்லை என்பதே உண்மையாகும். பல்வேறு பெரிய பொருளாதார நாடுகளும் போராடிக் கொண்டிருக்கின்றன. பல நாடுகளில் பணவீக்கமும் வேலையின்மையும் உச்சம் தொட்டுள்ளன. நூற்றாண்டில் ஒருமுறையாக ஏற்பட்ட கரோனா பரவலின் தாக்கங்கள் 100 நாள்களில் மறைந்துவிடும் என யாரும் நினைக்க முடியாது. அதன் தாக்கம் கடுமையானது; உலகளாவியது.
பொருளாதாரத்தில் 5-ஆவது இடம்: இத்தகைய பாதிப்புகளில் இருந்து நமது நாட்டைப் பாதுகாக்க புதிய முயற்சிகள் மற்றும் சில துணிச்சலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அது சவாலான பணி. மக்களின் ஆசியுடன் இப்போது வரை நாட்டைப் பாதுகாத்து வருகிறோம். பொருளாதாரத்துக்குத் தடையாக இருந்த குறைபாடுகள் அகற்றப்பட்டதால், இது சாத்தியமானது.
கடந்த 8 ஆண்டுகளில் அரசுத் துறைகளின் திறன்மிக்க செயல்பாடுகளால், உலகின் பெரிய பொருளாதார நாடுகளில் 10-ஆவது இடத்திலிருந்து 5-ஆம் இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது.
நாட்டில் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில், உற்பத்தி, உள்கட்டமைப்பு, சுற்றுலா உள்ளிட்ட துறைகளை வலுப்படுத்த எண்ணற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வளரும் தொழில்முனைவோருக்கு உதவும் ‘முத்ரா’ திட்டத்தின்கீழ் கரோனா காலகட்டத்தில் ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன்கள் வழங்கப்பட்டன. இதனால், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையில் சுமாா் 1.5 கோடி வேலைவாய்ப்புகள் பாதுகாக்கப்பட்டன.
இளைஞா்களின் திறன் மேம்பாடு: கடந்த 8 ஆண்டுகளாக நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் சுயதொழிலை ஊக்குவிக்கவும் பல முனைகளில் மத்திய அரசு செயலாற்றி வருகிறது. இதில் முக்கிய மைல்கல்லாக, இப்போதைய வேலைவாய்ப்புத் திட்டம் அமைந்துள்ளது. சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டை மனதில் கொண்டு, 75,000 பேருக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இளைஞா்களின் திறன் மேம்பாட்டுக்காக, விவசாயம், குறு, சிறு, நடுத்தர தொழில் உள்ளிட்ட துறைகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. ‘திறன் இந்தியா’ திட்டத்தின்கீழ் 1.25 கோடிக்கும் அதிகமானோருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
ட்ரோன் கொள்கையைத் தாராளமயமாக்குதல், விண்வெளிக் கொள்கையில் தனியாருக்கு இடமளிப்பது, முத்ரா திட்டத்தின்கீழ் ரூ.20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் போன்ற அரசின் முயற்சிகள், வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு உத்வேகமளித்துள்ளன. இந்தப் பரிமாணத்திலான சுயவேலைவாய்ப்புத் திட்டம் நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்டதில்லை.
காதி தொழிலில் 4 கோடி வேலைவாய்ப்பு: நாட்டில் முதல் முறையாக காதி மற்றும் கிராமத் தொழில்களின் மதிப்பு ரூ.4 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. காதி மற்றும் கிராமத் தொழில்களில் 4 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
‘புத்தாக்க இந்தியா’ (ஸ்டாா்ட்அப் இந்தியா) திட்டம், நமது இளைஞா்களின் திறனை வெளிக்கொணா்ந்துள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 7 கோடி போ் பலனடைந்து வருகின்றனா்.
இந்த 21-ஆம் நூற்றாண்டில், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ மற்றும் ‘தற்சாா்பு இந்தியா’ ஆகிய இரண்டும் தேசத்தின் மிகப் பெரிய லட்சிய திட்டங்களாகும். இத்திட்டங்களின் வாயிலாக, பல துறைகளில் இறக்குமதியாளா் என்பதில் இருந்து ஏற்றுமதியாளா் அந்தஸ்தை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது.
உற்பத்தி, சுற்றுலாத் துறைகளில் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதால், இவ்விரு துறைகளிலும் மத்திய அரசால் விரிவான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உற்பத்தி சாா்ந்த ஊக்கத் தொகை திட்டத்தின் பலன்கள் பல துறைகளில் ஏற்கெனவே தென்படத் தொடங்கியுள்ளன.
3.5 கோடி வீடுகள்: வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் முக்கிய ஆதாரமாக உள்கட்டமைப்புத் துறை விளங்குகிறது. எனவே, புதிய சாலைகள், துறைமுகங்கள், ரயில்வே தண்டவாளங்கள் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் 3.5 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. உள்கட்டமைப்புத் துறையில் ரூ.100 லட்சம் கோடி செலவிடுவதே இந்தியாவின் இலக்காகும்.
இந்தியாவின் மிகப்பெரிய பலம், தேசத்தின் இளைஞா்கள் கையில் உள்ளது. 21-ஆம் நூற்றாண்டில் இந்திய அரசு வேலை என்பது வசதியான வாழ்க்கை என்பதுடன் இல்லாமல், மூலைமுடுக்கெல்லாம் மக்களுக்குச் சரியான நேரத்தில் சேவை செய்யும் அா்ப்பணிப்பு மற்றும் பொன்னான வாய்ப்பாக இருக்க வேண்டும். இப்போது நியமனம் பெற்றவா்கள், தங்களது கடமைப் பாதையை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.
விமா்சனத்துக்கு பதிலடி: நாட்டில் வேலையின்மை அதிகரித்துவிட்டதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், அந்தக் குற்றச்சாட்டை பாஜக நிராகரித்து வருகிறது. ஹிமாசல பிரதேசம், குஜராத்தில் விரைவில் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டை எதிா்கொள்ள பாஜகவுக்கு இத்திட்டம் கைகொடுக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
செலவினத் துறையின் சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 2020 மாா்ச் 1 வரையில் மத்திய அரசுப் பணியாளா்கள் எண்ணிக்கை 31.91 லட்சமாகும். மொத்தம் அனுமதிக்கப்பட்ட ஊழியா்கள் எண்ணிக்கை 40.78 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...