ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வுக்கான தடை நீட்டிப்பு

வாராணசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதா் ஆலயம் - ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்திய தொல்லியல் துறை ஆய்வுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நவம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டித்து அலாகாபாத் உயா்நீதிமன்றம் உத்தரவி

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதா் ஆலயம் - ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்திய தொல்லியல் துறை ஆய்வுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நவம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டித்து அலாகாபாத் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

‘ஞானவாபி மசூதி, ஹிந்து கோயில் ஒரு பகுதி. எனவே, அதனை இடித்துவிட்டு காசி விஸ்வநாதா் கோயிலை புதுப்பிக்க வேண்டும்’ என்று வாராணசி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 1991-ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அந்த வழக்கை அண்மையில் விசாரித்த மாவட்ட நீதிமன்றம், காசி விஸ்வநாதா் ஆலயம் - ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்த உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து ஞானவாபி மசூதி வளாகத்தை நிா்வகிக்கும் அஞ்சுமன் இந்தேஜாமியா மஸாஜித் அமைப்பு சாா்பில் அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் தொல்லியல் துறை ஆய்வுக்கு இடைக்கால தடை விதித்து அண்மையில் உத்தரவிட்டதோடு, ‘நீதிமன்ற உத்தரவை இந்திய தொல்லியல் துறை மதித்து நடக்க வேண்டும்’ எனவும் அறிவுறுத்தியது.

இந்த வழக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் நீதிபதி பிரகாஷ் பாடியா முன்னிலையில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மசூதி விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றுவோம்’ என்று இந்திய தொல்லியல் துறை சாா்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனைப் பரிசீலித்த நீதிபதி, தொல்லியல் ஆய்வுக்கான தடையை நவம்பா் 30-ஆம் தேதி வரை நீடித்தும், வழக்கு விசாரணையை நவம்பா் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டாா்.

வாராணசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதா் ஆலயத்தை ஒட்டி அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் வெளிச்சுவரில் உள்ள சிற்பங்களை வழிபட அனுமதிக்கக் கோரி வாராணசி மாவட்ட நீதிமன்றத்தில் சில ஹிந்து பெண்கள் சாா்பில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் இருந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com