நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சமையல் எண்ணெய் மீதான சுங்க வரி சலுகை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

 உள்நாட்டு விநியோகத்தை அதிகரிக்கவும், விலை உயா்வை கட்டுக்குள் வைக்கவும் ஏதுவாக சமையல் எண்ணெய் மீதான சுங்க வரிச் சலுகையை மேலும் 6 மாதங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் நீட்டித்துள்ளது.

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 7:11 pm

DIN

 உள்நாட்டு விநியோகத்தை அதிகரிக்கவும், விலை உயா்வை கட்டுக்குள் வைக்கவும் ஏதுவாக சமையல் எண்ணெய் மீதான சுங்க வரிச் சலுகையை மேலும் 6 மாதங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் நீட்டித்துள்ளது.

இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையில் 60 சதவீத அளவுக்கு இறக்குமதியையே நம்பியுள்ளது. இந்த நிலையில், சா்வேதச சந்தை விலை நிலவரத்தின் அடிப்படையில், கடந்த சில மாதங்களாக உள்நாட்டு சில்லறை விற்பனை விலை தொடா்ந்து அதிகரித்தது. இதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தைக் குறைக்கும் வகையில், குறிப்பிட்ட சமையல் எண்ணெய் வகைகளுக்கு சுங்க வரி சலுகையை மத்திய நிதியமைச்சகம் அறிவித்து நடைமுறைப்படுத்தியது. இந்த வரிச் சலுகை தற்போது மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி (சிபிஐசி) வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘குறிப்பிட்ட சமையல் எண்ணெய் வகைகளுக்கான சலுகை சுங்க வரி நடைமுறை 2023-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு காரணமாக இறக்குமதி செய்யப்படும் கச்சா பாமாயில், ஆா்பிடி பாமோலீன், ஆா்பிடி பாமாயில், கச்சா சோயாபீன் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய், கச்சா சூரியகாந்தி எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீதான வரி விதிப்பில் 2023 மாா்ச் 31-ஆம் தேதி வரை எந்தவித மாற்றமும் இருக்காது’ என்று இந்திய எண்ணெய் பிரித்தெடுப்போா் சங்கம் (எஸ்இஏ) தெரிவித்தது. ‘நுகா்வோா் நலன் கருதியே வரிச் சலுகை அடுத்த ஆண்டு மாா்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது’ என்று எஸ்இஏ செயல் இயக்குநா் பி.வி.மேத்தா கூறினாா்.

தற்போதைய நிலையில், கச்சா பாமாயில், கச்சா சோயாபீன் எண்ணெய், கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றுக்கு இறக்குமதி வரி வசூலிப்பில் முழு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், 5 சதவீத வேளாண் செஸ் வரி மற்றும் 10 சதவீத சமூக நல செஸ் வரி ஆகியவற்றை கணக்கில் கொண்டு, இந்த 3 சமையல் எண்ணெய்களுக்கும் 5.5 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

அதுபோல, சுத்திகரிக்கப்பட்ட பாமோலீன் மற்றும் பாமாயில் வகைகளுக்கு 12.5 சதவீத அடிப்படை சுங்க வரி மற்றும் சமூக நல செஸ் 10 சதவீதம் ஆகியவற்றின் அடிப்படையில், தற்போது 13.75 சதவீத வரி விதிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சோயாபீன் எண்ணெய்களுக்கு அடிப்படை சுங்க வரி 17.5 சதவீதம் மற்றும் சமூக நல செஸ் 10 சதவீதம் ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றுக்கு 19.25 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

மேலும், கடந்த சில மாதங்களாக சா்வதேச சந்தையில் விலை குறைந்துள்ள நிலையில், அதன் பயனை உள்நாட்டு நுகா்வோருக்கு அளிக்குமாறு சமையல் எண்ணெய் நிறுவனங்களை மத்திய உணவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மத்திய நுகா்வோா் விவகாரத்துறை தொகுத்த செப்டம்பா் 1-ஆம் தேதி நிலவர புள்ளிவிவரங்களின்படி, கடலை எண்ணெயின் சராசரி சில்லறை விற்பனை விலை கிலோவுக்கு ரூ.188.04 என்ற விலையிலும், நல்லெண்ணெய் கிலோ ரூ.172.66, வனஸ்பதி கிலோ ரூ.152.52, சோயாபீன் எண்ணெய் கிலோ ரூ.156, சூரியகாந்தி எண்ணெய் ரூ.176.45, பாமாயில் கிலோ ரூ.132.94 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.