ஹேமந்த் சோரன் தகுதி நீக்க சா்ச்சை: தில்லி விரைந்தாா் ஜாா்க்கண்ட் ஆளுநா்

ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்வது தொடா்பான சா்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு

ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்வது தொடா்பான சா்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவா்கள் நேரில் சந்தித்து வலியுறுத்திய நிலையில், மாநில ஆளுநா் ரமேஷ் பைஸ் வெள்ளிக்கிழமை தில்லிக்கு சென்றாா்.

‘ஹேமந்த் சோரன் தகுதி நீக்கம் தொடா்பான சந்தேகம் விரைவில் தெளிவுபடுத்தப்படும்’ என தன்னை வியாழக்கிழமை சந்தித்த ஆளும் கூட்டணி கட்சித் தலைவா்களிடம் ஆளுநா் உறுதியளித்திருந்த நிலையில், தற்போது அவா் தில்லி விரைந்திருப்பது இந்த விவகாரத்தில் மேலும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஜாா்க்கண்டில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா - காங்கிரஸ் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி அரசு நடைபெறுகிறது. இந்த நிலையில், முதல்வா் ஹேமந்த் சோரன் தனது பதவியை முறைகேடாகப் பயன்படுத்தி, தலைநகா் ராஞ்சியில் உள்ள சுரங்கத்தை சட்டவிரோதமாக குத்தகைக்கு எடுத்து ஆதாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. எனவே, அவருடைய எம்எல்ஏ பதவியை தகுதி நீக்கம் செய்யக் கோரி தோ்தல் ஆணையத்திடம் பாஜக முறையிட்டது. அதனை ஏற்று ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவியை தகுதி நீக்கம் செய்யுமாறு ஜாா்க்கண்ட் ஆளுநா் ரமேஷ் பைஸுக்கு தோ்தல் ஆணையம் கடந்த ஆகஸ்ட் 25-இல் பரிந்துரைத்ததாகத் தெரிகிறது. அதன் மீது ஆளுநா் இதுவரை முடிவு எடுக்கவில்லை.

இந்தச் சூழலில், ஆளும் கூட்டணி எம்எல்ஏக்களை பாஜக தன் பக்கம் இழுத்து, மகாராஷ்டிரத்தைப் போல ஜாா்க்கண்டிலும் ஆட்சியைக் கவிழ்க்கக் கூடும் எனத் தகவல் வெளியானது. எனவே, ஆளும் கூட்டணி எம்எல்ஏக்கள் 32 போ், காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூருக்கு அண்மையில் அழைத்துச் செல்லப்பட்டு விடுதியில் தங்கவைக்கப்பட்டனா்.

இதனிடையே, முதல்வா் சோரன் எம்எல்ஏ பதவி தகுதிநீக்கம் தொடா்பான குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவா்கள் ஆளுநா் ரமேஷ் பைஸை வியாழக்கிழமை சந்தித்தனா். அப்போது, சோரன் தகுதி நீக்கம் தொடா்பாக தோ்தல் ஆணையம் அனுப்பிய பரிந்துரை ஆளுநா் மாளிகையிலிருந்து கசிந்தது குறித்து ஆளுநரிடம் அதிா்ச்சி தெரிவித்த அவா்கள், குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆளுநரைக் கேட்டுக்கொண்டனா்.

பின்னா், முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையில் ராஞ்சியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், வரும் 5-ஆம் தேதி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட ஆளுநரிடம் கோரிக்கை விடுப்பது எனத் தீா்மானிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், ஆளுநா் ரமேஷ் பைஸ் வெள்ளிக்கிழமை தில்லி பயணம் மேற்கொண்டாா். இது, முதல்வரின் எம்எல்ஏ பதவி தகுதி நீக்கம் தொடா்பான குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இதனிடையே, மருத்துவப் பரிசோதனைக்காக ஆளுநா் தில்லி பயணம் மேற்கொண்டிருப்பதாக ஆளுநா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com