அனைத்துத் தரப்பினருக்கும் கட்டுப்படியான விலையில் தரமான மருந்து கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியலில் (என்எல்இஎம்) 384 மருந்துகள் இடம் பெற்றுள்ளதாக மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
இந்தப் பட்டியலில் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள், ஆன்டிபயாடிக் (நுண்ணுயிர் எதிர்ப்பு), நோய்த் தடுப்பு மருந்துகள் உள்ளிட்ட 34 புதிய மருந்துகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன. முந்தைய பட்டியலில் இருந்த முக்கியத்துவமற்ற 26 மருந்துகள்நீக்கப்பட்டுள்ளன. 27 சிகிச்சைப் பிரிவுகளுடன் இந்த மருந்துகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
தேசிய அத்தியாவசிய மருந்து பட்டியல் 1996-ஆம் ஆண்டு முதன் முதலில் வெளியிடப்பட்டது. பின்னர் கடைசியாக 2015-ஆம் ஆண்டு இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டது. மீண்டும் இந்தப் பட்டியலை மறுஆய்வு செய்ய மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், 2018-ஆம் ஆண்டு மருந்துகளுக்கான சுதந்திரமான தேசிய நிலைக் குழுவை (எஸ்என்சிஎம்) அமைத்தது. பல்வேறு நிபுணர்கள் மற்றும் தொடர்புடையவர்களுடன் விரிவான ஆலோசனைக்குப் பிறகு இந்தக் குழு, பட்டியலை கடந்த வாரம் சமர்ப்பித்தது. குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, 2022- ஆண்டு தேசியப் பட்டியலை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: "எல்லோருக்கும் மருந்து, மலிவு விலை மருந்து' என்பது பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கமாகும். இந்த அடிப்படையில் அனைத்து நிலைகளிலும் கட்டுப்படியான விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், இந்த அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியல் முக்கியப் பங்காற்றி வருகிறது.
2022-ஆம் ஆண்டின் புதிய பட்டியலில் மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. செயல்திறன், பாதுகாப்பு, தரம், விலை ஆகியவற்றின் அடிப்படையில் அத்தியாவசிய மருந்துகள் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. மருந்துகளின் நியாயமான பயன்பாட்டை ஊக்குவிப்பதுதான் தேசிய பட்டியலின் நோக்கமாகும்.
குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்துகளின் வரையறுக்கப்பட்ட பட்டியல் குறைந்த செலவு மட்டுமின்றி, சுகாதாரப் பாதுகாப்பின் தரத்தை மேம்படுத்தும். மேலும், மருந்துகளின் சிறந்த நிர்வாகத்தையும் வழங்குகிறது. என்எல்இஎம் ஓர் ஆற்றல் மிக்க ஆவணம். மாறிவரும் பொது சுகாதாரத்துக்கு முன்னுரிமைகள், மருந்து அறிவில் முன்னேற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு திருத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணையமைச்சர் பாரதி பிரவீண் பவார், மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண், எஸ்என்சிஎம் துணைத் தலைவர் ஒய்.கே. குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெண்டாமுஸ்டைன் ஹைட்ரோகுளோரைடு, இரினோடெகன் ஹெச்சிஐ டிரைஹைட்ரúட், லெனலிடோமைடு, லியூப்ரோலைடு அசிடேட் ஆகிய நான்கு முக்கிய புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளும், ஐவர்மெக்டின், முபிரோசின், மெரோபெனெம் போன்ற தொற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. உலகளாவிய நோய்த் தடுப்புத் திட்டத்தில் (ரோட்டா வைரஸ் தடுப்பூசி) தடுப்பூசிகளும் இந்தப் புதிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.