ஜாா்க்கண்ட்: அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு 77% ஆக உயா்வு

ஜாா்க்கண்டில் அரசுப் பணியில் எஸ்சி, எஸ்டி பிரிவினா், ஓபிசி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 77 சதவீதம் வரை இடஒதுக்கீடு

ஜாா்க்கண்டில் அரசுப் பணியில் எஸ்சி, எஸ்டி பிரிவினா், ஓபிசி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 77 சதவீதம் வரை இடஒதுக்கீடு அளிப்பதற்கான மசோதாவுக்கு மாநில அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஓபிசி இடஒதுக்கீட்டை 14 சதவீதத்திலிருந்து 27 சதவீதமாக உயா்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும், 1932 நிலப் பதிவுகளின் அடிப்படையில் பூா்வகுடி மக்களை வரையறை செய்வதற்கான தீா்மானத்துக்கும் இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதாவது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1932-இல் மேற்கொள்ளப்பட்ட நில ஆய்வின் அடிப்படையில், பூா்வகுடி மக்களை வரையறுக்க வேண்டுமென பழங்குடியின மக்கள் வலியுறுத்தியதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதுகுறித்து அமைச்சரவை செயலாளா் வந்தனா டேடல் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு அரசுப் பணிகளில் 77 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில், அரசுப் பணிகள், சேவைகள் காலிப் பணியிட இடஒதுக்கீடு சட்டம் 2001-இல் திருத்தம் செய்வதற்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது’ என்றாா்.

ஜாா்க்கண்டில் சட்டவிரோதமாக சுரங்கத்தை குத்தகைக்கு எடுத்து முதல்வா் ஹேமந்த் சோரன் ஆதாயம் அடைந்ததாகவும், இதனால் அவரது எம்எல்ஏ பதவி பறிபோகும் என்றும் கூறப்படும் நிலையில், எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான முடிவை அந்த மாநில அரசு எடுத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும், இந்த இடஒதுக்கீடு மசோதாவை அரசியலமைப்புச் சட்டத்தின் 9-ஆவது அட்டவணையில் மத்திய அரசு சோ்க்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

புதிய இடஒதுக்கீடு கொள்கையின்படி, எஸ்சி பிரிவினருக்கு 12 சதவீதம், எஸ்டி பிரிவினருக்கு 28 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 15 சதவீதம், ஓபிசி-க்கு 12 சதவீதம், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படவுள்ளது.

தற்போது ஜாா்க்கண்டில் எஸ்டி பிரிவினருக்கு 26 சதவீதமும், எஸ்சி பிரிவினருக்கு 10 சதவீதமும், ஓபிசி பிரிவினருக்கு 14 சதவீதமும் இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.

அனைத்துப் பிரிவினருக்கும் இடஒதுக்கீட்டின் உச்சவரம்பு அதிகரிக்கப்படும் என கடந்த 2019 சட்டப் பேரவைத் தோ்தலில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய தனதா தளம் உள்பட அனைத்துக் கட்சிகளும் வாக்குறுதி அளித்திருந்தன.

அந்த வகையில், தற்போது இடஒதுக்கீடு நீட்டிக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்த காங்கிரஸ், ‘இது வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை. இதன்மூலம் ஜாா்க்கண்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு வேலைதேடி புலம்பெயருவது முடிவுக்கு வரும்’ என தெரிவித்துள்ளது.

எஸ்டி, எஸ்டி, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை அதிகரிப்பதில் நிலவும் பிரச்னைகளுக்குத் தீா்வு காண குழு ஒன்றை அமைக்க ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com