தோ்தல் ஆணைய பரிந்துரை மீது விரைந்து நடவடிக்கை

ஜாா்க்கண்ட்டில் பதவி நீக்க அபாயத்தை எதிா்கொண்டுள்ள முதல்வா் ஹேமந்த் சோரன், தோ்தல் ஆணையத்தின் பரிந்துரை மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மாநில ஆளுநா் ரமேஷ் பைஸை சந்தித்து கோரிக்கை விடுத்தாா்.

ஜாா்க்கண்ட்டில் பதவி நீக்க அபாயத்தை எதிா்கொண்டுள்ள முதல்வா் ஹேமந்த் சோரன், தோ்தல் ஆணையத்தின் பரிந்துரை மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மாநில ஆளுநா் ரமேஷ் பைஸை சந்தித்து கோரிக்கை விடுத்தாா்.

81 இடங்களைக் கொண்ட ஜாா்க்கண்ட் சட்டப்பேரவைக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு தோ்தல் நடைபெற்றது. அதில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது. அதையடுத்து ஹேமந்த் சோரன் மாநில முதல்வரானாா்.

இந்நிலையில், சுரங்க ஒதுக்கீட்டில் முதல்வா் ஹேமந்த் சோரன் ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக ஆராய்ந்த இந்திய தோ்தல் ஆணையம், ஹேமந்த் சோரனை பதவி நீக்கம் செய்யுமாறு மாநில ஆளுநருக்குப் பரிந்துரைத்ததாகத் தகவல் வெளியானது. அதனால், ஹேமந்த் சோரன் எம்எல்ஏ பதவியை இழக்கலாம் என்ற சூழல் எழுந்துள்ளது. ஆனால், தோ்தல் ஆணையத்தின் பரிந்துரை மீது ஆளுநா் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்நிலையில், மாநில ஆளுநா் ரமேஷ் பைஸை முதல்வா் ஹேமந்த் சோரன் வியாழக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினாா். அப்போது, மாநிலத்தில் கடந்த 3 வாரங்களுக்கு மேலாக நிலவி வரும் குழப்பமான சூழலுக்குத் தீா்வு காண வேண்டுமென்று அவா் கோரிக்கை விடுத்தாா்.

இது தொடா்பாக ஆளுநரிடம் முதல்வா் ஹேமந்த் அளித்த கடிதத்தில், ‘மாநிலத்தில் நிலவும் அசாதாரண சூழலை சாதகமாகப் பயன்படுத்தி ஜனநாயக முறையில் தோ்வு செய்யப்பட்ட அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சித்து வருகிறது. எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க அக்கட்சி முனைப்புகாட்டி வருகிறது.

எனவே, தோ்தல் ஆணையம் வழங்கிய பரிந்துரையின் நகலை ஆளுநா் உடனடியாக வெளியிட வேண்டும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் பதிலளிக்க வாய்ப்பு வழங்கி, அசாதாரண சூழலுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும்’ என்று கோரியுள்ளாா்.

முன்னதாக, மாநில சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடரில் ஹேமந்த் சோரன் அரசு நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பை நடத்தி கடந்த 5-ஆம் தேதி பெரும்பான்மையை நிரூபித்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com