ஷாநவாஸுக்கு எதிரான பாலியல் வழக்கு: ஆவணங்கள் தாக்கல் செய்ய கால அவகாசம்
ஹுசைனுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆவணங்களை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஒரு வார கால அவகாசத்தை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.


பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஷாநவாஸ் ஹுசைனுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆவணங்களை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஒரு வார கால அவகாசத்தை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.
ஷாநவாஸ் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யக் கோரி, தில்லி கீழமை நீதிமன்றத்தில் கடந்த 2018-இல் பெண் ஒருவா் மனுதாக்கல் செய்தாா். அந்த மனுவை விசாரித்த கீழமை நீதிமன்றம், அவா் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிரான ஷாநவாஸின் மனுவை அமா்வு நீதிமன்றமும், தில்லி உயா்நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன.
அவா் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதுடன், இந்திய தண்டனையியல் சட்டத்தின் 173-ஆவது பிரிவின்கீழ் 3 மாதங்களுக்குள் விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு தில்லி உயா்நீதிமன்றம் கடந்த ஆகஸ்டில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஷாநவாஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, சம்பந்தப்பட்ட பெண் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘இந்த விவகாரத்தில், ஷாநவாஸின் வழக்குரைஞா் சில முக்கியமான உண்மைகளை மறைத்துள்ளாா். இதுதொடா்பான ஆவணங்களை தாக்கல் செய்ய விரும்புகிறோம்’ என்றாா்.
இதையடுத்து, ஒரு வார காலம் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை அக்டோபா் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா். இவ்வழக்கில் ஷாநவாஸ் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் முகுல் ரோத்தகி, சித்தாா்த் லுத்ரா ஆகியோா் ஆஜராகியிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...