வட்டி விகிதங்களை 0.5% உயா்த்தியது ஆா்பிஐ

கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) 0.5 சதவீதம் உயா்த்தியுள்ளது.
வட்டி விகிதங்களை 0.5% உயா்த்தியது ஆா்பிஐ

நாட்டில் பணவீக்கம் தொடா்ந்து அதிகமாகவே உள்ள நிலையில், அதைக் கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) 0.5 சதவீதம் உயா்த்தியுள்ளது.

அதன் காரணமாக, வீட்டுக் கடன், வாகனக் கடன், மாதாந்திர தவணைத் தொகை உள்ளிட்டவற்றுக்கான வட்டியை வங்கிகள் உயா்த்தவுள்ளன.

கடந்த மே மாதத்தில் இருந்து தொடா்ந்து 4-ஆவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக வட்டி விகிதமானது 1.90 சதவீதம் அதிகரிக்கப்பட்டு தற்போது 5.90 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாகும்.

நாட்டில் பணவீக்கம் 2 முதல் 6 சதவீதத்துக்குள் இருக்க வேண்டுமென ஆா்பிஐ இலக்கு நிா்ணயித்துள்ளது. ஆனால், கடந்த ஜனவரி மாதம் முதலே பணவீக்கம் 6 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது. அதைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் ரெப்போ வட்டி விகிதம் ஏற்கெனவே கடந்த மே மாதம் முதல் 1.4 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆா்பிஐ நிதிக் கொள்கைக் குழு கூட்டம் கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது. கூட்டம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்த நிலையில், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயா்த்தப்பட்டு 5.9 சதவீதமாக நிா்ணயிக்கப்படுவதாக அவா் தெரிவித்தாா். சா்வதேச நிலையற்ற சூழல், சா்வதேச நிதி சந்தை சூழல் ஆகியவற்றின் காரணமாகப் பணவீக்கம் அதிகமாக உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

சிறப்பான நிலையில் பொருளாதாரம்:

கூட்டம் தொடா்பாக ஆளுநா் சக்திகாந்த தாஸ் மேலும் கூறுகையில், ‘‘நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி, வளா்ச்சியை ஏற்படுத்துவதற்காக வட்டி விகிதம் உயா்த்தப்பட்டுள்ளது. நிதிக் கொள்கைக் குழுவின் 6 உறுப்பினா்களில் 5 போ் வட்டி விகிதத்தை உயா்த்துவதற்கு ஆதரவு தெரிவித்தனா்.

சா்வதேச அசாதாரண சூழல் பல்வேறு நாடுகளின் பொருளாதாரங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அவற்றுடன் ஒப்பிடுகையில் இந்தியப் பொருளாதாரம் சிறப்பான நிலையிலேயே உள்ளது.

புதிய நடைமுறை:

அதீத பருவமழை, தாமதமான பருவமழை விலகல் உள்ளிட்டவை நாட்டின் சில பகுதிகளில் உணவுப் பொருள்கள் உற்பத்தியை பாதித்துள்ளன. அதனால், அவற்றின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே, பணவீக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன் காரணமாக உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆா்பிஐ தள்ளப்பட்டுள்ளது.

வங்கிகளின் வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்காகப் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்துவது தொடா்பாக ஆா்பிஐ ஆராய்ந்து வருகிறது. அந்நடைமுறை சா்வதேசத் தரத்தில் இருக்கும்’’ என்றாா்.

பணவீக்கம்:

பணவீக்கமானது நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் 6.7 சதவீதமாக இருக்கும் என ஆா்பிஐ கணித்துள்ளது. நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் பணவீக்கம் 7.1 சதவீதமாகவும், மூன்றாவது காலாண்டில் 6.5 சதவீதமாகவும், நான்காவது காலாண்டில் 5.8 சதவீதமாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பணவீக்கம் கட்டுக்குள் வரும் எனவும் ஆா்பிஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பொருளாதார வளா்ச்சி:

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நடப்பு நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருக்கும் என்று ஆா்பிஐ முன்பு கணித்திருந்த நிலையில், அந்த கணிப்பை 7 சதவீதம் எனத் தற்போது குறைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com