32 ஆண்டுகளுக்கு பிறகு...முதல்முறையாக சதம் அடித்த பாஜக

1990க்கு பிறகு, மாநிலங்களவையில் ஒரு கட்சி 100 இடங்களை பிடிப்பது இதுவே முதல்முறை.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வரலாற்றில் முதல்முறையாக மாநிலங்களவையில் 100 உறுப்பினர்களை பெற்று பாஜக சாதனை படைத்துள்ளது. வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் அஸ்ஸாம், திரிபுரா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் உள்ள இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றிபெற்றிருப்பதன் மூலம் பாஜக இந்த சாதனையை படைத்துள்ளது.

சமீபத்தில், ஆறு மாநிலங்களில் உள்ள 13 மாநிலங்களவை இடங்களுக்காக தேர்தல் நடத்தப்பட்டது. அதில், பஞ்சாபில் தோற்றாலும் வடகிழக்கு மாநிலங்களில் மூன்று இடங்களை கைப்பற்றியுள்ளது. அதேபோல, இமாச்சல பிரதேசத்தில் ஒரு மாநிலங்களவை இடத்தை கைப்பற்றியுள்ளது. அந்த மாநிலத்திலிருந்து ஓய்வு பெறும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களே ஆவர்.

பஞ்சாபில் ஐந்து இடங்களையுமே ஆம் ஆத்மி வென்றுள்ளது. மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையின் புதுப்பிக்கப்பட்ட தகவல் மாநிலங்களவை இணையதளத்தில் இன்னும் பதிவேற்றப்படவில்லை. இருப்பினும், சமீபத்திய தேர்தலில் மேலும் மூன்று இடங்களை பாஜக கைப்பற்றிருப்பதன் மூலம் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 100ஆக உயர்ந்துள்ளது.

இருந்த போதிலும், 245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் பாஜக இன்னும் பெரும்பான்மையை பெறவில்லை. 2014 மக்களவை தேர்தலுக்கு பிறகு, பாஜக தொடர் முன்னேற்றத்தை கண்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு, பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 55ஆக இருந்தது. 

பின்னர், நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் குறிப்பிடத்தகுந்த மாநிலங்களில் ஆட்சியை பிடித்ததன் மூலம் அதன் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு, மாநிலங்களவையில் 100 உறுப்பினர்கள் கொண்ட கட்சியாக காங்கிரஸ் இருந்துள்ளது. கடந்த 1990ஆம் ஆண்டு, ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 108 உறுப்பினர்கள் இருந்தனர். அந்தாண்டு நடைபெற்ற தேர்தலில், அந்த எண்ணிக்கை 99ஆக குறைந்தது. 

பின்னர், நடைபெற்ற மாநில தேர்தல்களில் தோல்வியை சந்தித்தன் மூலம் காங்கிரஸ் தொடர் சரிவை சந்தித்துவந்துள்ளது. ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், ஜார்கண்ட ஆகிய மாநிலங்களில் உள்ள மாநிலங்களவை இடங்களுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படவுள்ளதால் பாஜகவின் எண்ணிக்கை குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த சூழலில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலின் மூலம் பாஜக தனது எண்ணிக்கையை மீண்டும் பெருக்கிக்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறுது. காலியாக உள்ள 11 இடங்களில் எட்டு இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளது.

பிற மாநிலங்களில் இழக்க போகும் இடங்களை உத்தரப் பிரதச இடங்களை கொண்டு சமப்படுத்தி கொள்ளும் எனக் கூறப்படுகிறது. உத்தரப் பிரதேசத்திலிருந்து ஓய்வு பெறும் 11 மாநிலங்களவை உறுப்பினர்களில், ஐவர் பாஜகவை சேர்ந்தவர்கள் ஆவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com