பஞ்சாபில் ஜூலை 1 முதல் வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

பஞ்சாபில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அமைந்து இன்று சனிக்கிழமையுடன் 30 நாள்கள் நிறைவடைந்ததையடுத்து, அனைத்து வகை வீட்டிற்கும் ஜூலை 1 முதல் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்
பஞ்சாபில் ஜூலை 1 முதல் வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

சண்டிகர்: பஞ்சாபில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அமைந்து இன்று சனிக்கிழமையுடன் 30 நாள்கள் நிறைவடைந்ததையடுத்து, அனைத்து வகை வீட்டிற்கும் ஜூலை 1 முதல் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலத்தில் ஏற்கனவே விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பட்டியல் சாதியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளோரின் குடும்பங்களுக்கு 200 யூனிட்கள் இலவச மின்சாரதச்தை வழங்கப்பட்டு வருகிறது. 

பஞ்சாபில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அமைந்து இன்று சனிக்கிழமையுடன் 30 நாள்கள் நிறைவடைந்தது. கடந்த செவ்வாயன்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலை நேரில் சந்தித்த பகவந்த் மான், இலவசமாக 300 யூனிட் மின்சாரம் வழங்கும் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார். 

கடந்த வியாழக்கிழமை ஜலந்தரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஏப்ரல் 16 ஆம் தேதி "நல்ல செய்தி" அறிவிக்கப்படும் என்று முதல்வர் பகவந்த் மான் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஒவ்வொரு வீட்டிற்கும் ஜூலை 1 முதல் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று சனிக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இதுதொடர்பாக மாநிலத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் பல்வேறு நாளிதழ்களில் இன்று சனிக்கிழமை வெளியிடப்பட்ட விளம்பரங்களில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மியின் இலவச மின்சாரம் உறுதிமொழியின்படி, பொருளாதார வேற்றுமையின்றி, அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் திட்டத்தின்படி, 2016 ஆம் ஆண்டு முதல் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் பெற்று வரும் எஸ்சி, எஸ்டி, பிசி பிரிவினர் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளோர் என அனைவரும் இனி 300 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவார்கள்.  300 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோர், கூடுதல் யூனிட்டுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும்.

300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பது பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும்.

மாநிலத்தில் அதிகரித்து வரும் சம்பளம் மற்றும் ஓய்வூதியச் சுமை மற்றும் அதிகரித்து வரும் கடன் மற்றும் வட்டி போன்ற சுமைகளுக்கு மத்தியில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான இலவச திட்டங்களாலும் மாநில வளர்ச்சிக்கான பணிகளில் தேக்கம் ஏற்படும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, மார்ச் 31 நிலவரப்படி, பஞ்சாபின் மொத்த நிலுவைத் தொகை ரூ.2,52,880 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது 2020-21ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 42 சதவிகிதம் மற்றும் நிலுவையில் உள்ள கடன் ரூ.2,73,703 கோடி. இது 2021-22 இல் ஜிஎஸ்டிபியில் 45 சதவிகிதமாகும்.

ஆண்டு பட்ஜெட்டில் இருபது சதவிகிதம் கடனுக்கான வட்டியை செலுத்த மட்டுமே செலவிடப்படுகிறது.

இந்தியாவின் தலைமை கணக்குத் தணிக்கையாளரின் சமீபத்திய ஆய்வின்படி, 2024-25 ஆம் ஆண்டிற்குள் மாநிலத்தின் நிதி நெருக்கடி மோசமடைந்து கடன் ரூ.3.73 லட்சம் கோடியை எட்டும் என்று கூறப்படுகிறது.

முந்தைய காங்கிரஸ் அரசின் கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் கடன் ரூ. 1 லட்சம் கோடி அதிகரித்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com