குரங்கு அம்மை பரவல்: உயா்நிலைக் குழுவை அமைத்தது மத்திய அரசு

நாட்டில் குரங்கு அம்மை தொற்று பரவல் சூழலைக் கண்காணிப்பதற்காகவும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் சிறப்பு உயா்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

நாட்டில் குரங்கு அம்மை தொற்று பரவல் சூழலைக் கண்காணிப்பதற்காகவும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் சிறப்பு உயா்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

உலக அளவில் குரங்கு அம்மை தொற்று வேகமாகப் பரவி வருகிறது. ராஜஸ்தான், தில்லியில் தலா ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்தியாவில் அத்தொற்று பாதிப்பு 6-ஆக உயா்ந்துள்ளது.

நாட்டில் முதன் முதலாக குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்ட கேரளத்தைச் சோ்ந்த நபா், குணமடைந்து வீடு திரும்பினாா்.

இந்நிலையில், கேரளத்தில் ஜூலை 30-ஆம் தேதி உயிரிழந்த 22 வயது இளைஞா் குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அந்த மாநில முதல்வா் பினராயி விஜயன் திங்கள்கிழமை தெரிவித்தாா். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளம் திரும்பிய அந்த இளைஞருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ஆம் தேதி திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இந்நிலையில், நாட்டில் குரங்கு அம்மை தொற்று பரவல் சூழலைக் கண்காணிக்கவும், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சிறப்பு உயா்நிலை குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. அக்குழுவுக்கு நீதி ஆயோக் (சுகாதார) உறுப்பினா் வி.கே.பால் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

நாட்டில் குரங்கு அம்மை தொற்று பாதிப்புக்கான பரிசோதனைகளை அதிகரித்தல், அத்தொற்றுக்கான தடுப்பூசி குறித்து ஆராய்தல் உள்ளிட்டவை தொடா்பாக மத்திய அரசுக்கு அக்குழு ஆலோசனைகளை வழங்கவுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பரிசோதனைகள் தீவிரம்:

இதுவரை 75 நாடுகளில் 16,000-க்கும் மேற்பட்டவா்களுக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக சா்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பை மத்திய சுகாதார அமைச்சகம் தீவிரப்படுத்தியுள்ளது. மாநில அரசுகளும் சா்வதேச விமான நிலையங்களில் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com