
சீனா போருக்குத் தயாராகி வருகிறது. ஆனால், இந்திய அரசாங்கம் ஆபத்தை உணராமல் தூங்கிக் கொண்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவிடமிருந்து சீனா 2 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பினை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளதாகவும், இந்தியாவின் 20 ராணுவ வீரர்களை கொன்றது மட்டுமல்லாது அருணாசலப் பிரதேசத்தில் உள்ள நமது ராணுவ வீரர்களைத் தாக்கி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதாவது: சீனாவிலிருந்து வரும் ஆபத்தை என்னால் தெளிவாகப் பார்க்க முடிகிறது. கடந்த 2-3 ஆண்டுகளாகவே சீனாவுடனானப் பிரச்னை குறித்து தெளிவாக உள்ளேன். ஆனால், இந்த விவகாரத்தை அரசு கண்டுகொள்ளாமல் மறைக்க நினைக்கிறது. இந்த ஆபத்தை மறைக்கவும் முடியாது, கண்டுகொள்ளாமல் விடவும் முடியாது. அருணாசலப் பிரதேசம் மற்றும் லடாக் பகுதிகளில் சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இந்திய அரசாங்கம் தூங்கிக் கொண்டிருக்கிறது.
இந்திய அரசாங்கம் சீனா குறித்த அச்சுறுத்தல்களைக் கேட்பதில்லை. ஆனால், சீன அரசு போருக்குத் தயாராகி வருகிறது. அவர்கள் ஊடுருவலில் ஈடுபடவில்லை. அவர்கள் போருக்குத் தயாராகின்றனர். அவர்களது ஆயுத இருப்பு மற்றும் பயன்பாட்டினைப் பார்த்தால் அவர்கள் போருக்குத் தயாராவது தெளிவாகத் தெரியும். நமது அரசு அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. நரேந்திர மோடி தலைமையிலான அரசு போர்த்தந்திரத்துடன் செயல்படவில்லை. சீனா விவகாரத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என நான் மூன்று நான்கு முறை சொல்லிவிட்டேன். ஆனால், அரசு வெறும் அறிக்கைகளையும், பதில்களையும் மட்டுமே கூறி வருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.