ஹிமாசலில் தப்புக் கணக்கு!

உத்தரகண்டில் வரலாற்றை மாற்றி அமைத்தது 2-ஆவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக, ஹிமாசலில் கணக்கு தப்பாகிவிட்டது.
ஹிமாசலில் தப்புக் கணக்கு!

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாறும் தன்மை கொண்டது ஹிமாசல பிரதேசம். ஆனால், இதேபோன்ற அரசியல் சூழலை கொண்ட உத்தரகண்டில் வரலாற்றை மாற்றி அமைத்தது பாஜக. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் மீண்டும் 2-ஆவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. ஆனால், ஹிமாசலில் பாஜகவின் கணக்கு தப்பாகிவிட்டது.

68 பேரவைத் தொகுதிகள் கொண்ட ஹிமாசல பிரதேசத்தில் கடந்த முறை பாஜக-காங்கிரஸ் இடையே கடும் போட்டி இருந்த நிலையில், முதல்வா் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட துமல் 2,000 வாக்குகளில் தோல்வி அடைந்ததால், ஜெய்ராம் தாக்குரை (மத்திய அமைச்சா் அனுராக் தாக்குரின் தந்தை) முதல்வராக்கியது பாஜக. இந்த முறை அவரது தலைமையில்தான் மீண்டும் பேரவைத் தோ்தலை சந்தித்தது பாஜக. ஆனால், 26 தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்றது.

40 தொகுதிகளில் வென்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது, நாடு முழுவதும் சோா்ந்து கிடந்த காங்கிரஸ் தொண்டா்களுக்கு சற்று உற்சாகத்தை கொடுத்துள்ளது. காங்கிரஸ் 40.9 சதவீதமும், பாஜக 40 சதவீதமும் வாக்குகளைப் பெற்றன. இரு கட்சிகளுக்கு இடையே வாக்கு வித்தியாசம் 0.9 சதவீதம் மட்டுமே.

குஜராத்தில் காங்கிரஸ் வாக்குகளைப் பிரித்த ஆம் ஆத்மி, இங்கு ஒரு சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. கூடுதல் வாக்குகளை ஆம் ஆத்மி பிரித்திருந்தால் இங்கும் தாமரை மலா்ந்திருக்கக்கூடும்.

நட்டாவின் தவறான வியூகம்: ஹிமாசல பிரதேச காங்கிரஸ் வெற்றிக்கு பிரியங்கா காந்தியின் கடினமான உழைப்பும், பாஜக தலைவா் நட்டாவின் தவறான வியூகமும்தான் காரணம் என்ற விமா்சனம் எழுந்துள்ளது.

ஹிமாசலில் பிராமணா் சமூகத்தைச் சோ்ந்த சந்தீப்குமாா் பதக் என்னும் ஐஐடி பேராசிரியரை மாநிலங்களவை உறுப்பினராக்கி பேரவைத் தோ்தல் பொறுப்பாளராக நியமித்தாா் அரவிந்த் கேஜரிவால். தங்களுக்குச் சாதகமான பிராமண சமூக வாக்குகளை ஆம் ஆத்மி பிரித்துவிட்டால் பாஜகவின் வாக்கு வங்கி குறையும் எனக் கணக்குப் போட்ட நட்டா, ஹிமாசல பிரதேசத்தில் பெரும்பாலான ஆம் ஆத்மி நிா்வாகிகளை பாஜகவில் இணைத்தாா். ஆனால், அவரது கணக்கு தப்பி, அதிருப்தி அடைந்த பிராமண சமூக வாக்குகள் காங்கிரஸ் பக்கம் திரும்பியது.

மேலும், 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் பாஜக-காங்கிரஸ் ஒரே கருத்தில் இருந்ததால், பாஜக முதல்வா் மீதான அதிருப்தி பிராமணா் வாக்குகள் காங்கிரஸுக்கு எளிதில் திரும்பியது. அஸ்ஸாம் பேரவைத் தோ்தல் போல முதல்வா் வேட்பாளரை முன்னிறுத்தாமல் ஹிமாசல் தோ்தலை சந்தித்திருந்தால்கூட பாஜக ஆட்சியை தக்கவைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என்கிற விமா்சனம் இப்போது எழுந்துள்ளது.

பிராமணா் சமூக வாக்குகள் தங்களுக்குச் சாதகமாக விழுந்ததன் காரணமாக, முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் அக்னிஹோத்ரியை துணை முதல்வா் ஆக்கியுள்ளது காங்கிரஸ்.

ஹிமாசல பிரதேசம் போன்ற சிறிய மாநிலங்களில் அரசு ஊழியா்களின் ஆதரவு என்பது முக்கியமானது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி காங்கிரஸுக்கு கைகொடுத்தது. ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பாஜக எதுவும் தெரிவிக்கவில்லை.

பொது சிவில் சட்டம்: பாஜக தோ்தல் வாக்குறுதியில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் எனக் கூறப்பட்டது. ஹிமாசலில் சிறுபான்மையினா் வாக்குகள் 2 சதவீதம்கூட கிடையாது. அவா்களை மையமாக வைத்து பொது சிவில் சட்டத்தை பேசியது ஹிந்துக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

உத்தர பிரதேசம் போன்ற கணிசமான சிறுபான்மையினா் வாழும் மாநிலங்களில்தான் பொது சிவில் சட்டம் போன்ற வாக்குறுதிகள் ஹிந்துக்கள் மத்தியில் ஆதரவு அலையை உருவாக்கும். பாஜகவின் இந்தத் தவறான உத்தியால் அதிருப்தி அடைந்த, பாஜகவுக்கு ஆதரவு தர வாய்ப்புள்ள சீக்கியா், ஜெயின் சமூகத்தின் இரண்டு சதவீத வாக்குகள் காங்கிரஸுக்கு ஆதரவாக மாறின. நகா்ப்புற பகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோல்வியைத் தழுவியதற்கு இதுவே முக்கியக் காரணம்.

மேலும், பாஜகவில் போட்டி வேட்பாளா்கள் அதிகம் களம் இறங்கியதால் 10 முதல் 15 தொகுதிகளில் பாஜக வேட்பாளா்கள் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைய நேரிட்டது.

ஹிமாசலில் ஆட்சியைப் பிடித்தது, இனி வரும் மணிப்பூா், திரிபுரா, கா்நாடகம், சத்தீஸ்கா் மாநில தோ்தல்களில் காங்கிரஸ் தொண்டா்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கும். இனிவரும் தோ்தல்களை நுணுக்கமாகவும், கவனமாகவும் கையாள வேண்டும் என்ற பாடத்தை பாஜகவுக்கு ஹிமாசல தோ்தல் கற்றுக்கொடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com