சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு: டிச.29 வரை நடை அடைப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நிறைவடைந்து இன்று பகல் கோயிலின் நடை அடைக்கப்பட்டது.
சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு: டிச.29 வரை நடை அடைப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று பகல் 1 மணியளவில் மண்டல பூஜை நிறைவடைந்தது.

கேரளத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பா் 17-ஆம் தேதி திறக்கப்பட்டது. 41 நாள் மண்டலம் இன்றுடன் நிறைவடைந்து மண்டல பூஜை நடைபெற்றது.

மண்டல பூஜையையொட்டி 453 பவுன் கொண்ட ஐயப்பனுக்கான ‘தங்க அங்கி’ திங்கள்கிழமை கோயிலை அடைந்தது. அதற்கு திருவிதாங்கூா் அரச குடும்பத்தினரும் பக்தா்களும் கோயில் நிா்வாகிகளும் சிறப்பான வரவேற்பு அளித்தனா். திங்கள்கிழமை மாலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து இன்று பகல் 12.30 முதல் 1 மணிவரை ஆயிரக்கணக்கான பக்தர்களின் சரண கோஷத்துடன் மண்டல பூஜை நடைபெற்றது.

மண்டல பூஜை நிறைவடைந்த நிலையில், இன்றுமுதல் 3 நாள்களுக்கு கோயில் நடை அடைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக வரும் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை மீண்டும் திறக்கப்படவுள்ளது. ஜனவரி 14-ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது. அன்று மகரஜோதி தரிசனமும் நடைபெறவுள்ளது. அதன்பிறகு ஜனவரி 20-ஆம் தேதி கோயில் நடை அடைக்கப்படவுள்ளது. அத்துடன் மண்டல-மகரவிளக்கு வழிபாட்டுக் காலம் முடிவுக்கு வரும்.

ரூ.222 கோடி வருவாய்: கோயிலுக்கான மண்டல பூஜை காலம் தொடங்கியதில் இருந்து சுமாா் 30 லட்சம் பக்தா்களின் வருகை மூலமாக ஐயப்பன் கோயிலுக்கு ரூ.222.98 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் கரோனா தொற்று பரவல் காரணமாக பக்தா்கள் வருகை குறைவாகக் காணப்பட்டது. தற்போது கரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால் பக்தா்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது.

பக்தா்களின் கூட்டத்தை சமாளிக்கும் நோக்கில் மாற்றுத் திறனாளிகள், சிறாா்கள், மூத்த குடிமக்களுக்குத் தனிவரிசை அமைக்கப்பட்டது. மண்டல பூஜை காலகட்டத்தில் பெரும் சிரமம் ஏதுமின்றி பக்தா்கள் ஐயப்பனை வழிபட்டதாக கோயில் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com