நாட்டின் ஆன்மாவை அவமதிக்காதீர்கள்: ராகுல் காந்தி ட்வீட்

நாட்டின் ஆன்மாவை அவமதிக்காதீர்கள்: ராகுல் காந்தி ட்வீட்

நாட்டின் ஆன்மாவை அவமதிக்காதீர்கள் என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். 


நாட்டின் ஆன்மாவை அவமதிக்காதீர்கள் என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். 

கர்நாடகம் மாநிலம், உடுப்பி மாவட்டம் குந்தாபுராவில் உள்ள அரசு பியூ கல்லூரியில் ஹிஜாப் அணிய பள்ளி நிர்வாகம் தடை விதித்தது. ஆனால் அதனையும் மீறி முஸ்லிம் மாணவிகள் 6 பேர் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்ததால் பிரச்னை வெடித்தது. இதன் காரணமாக, பள்ளிகள், கல்லூரிகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து பெங்களூருவில் கல்வி நிறுவனங்களுக்கு அருகே ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்த 2 வாரங்களுக்கு காவல்துறை தடை விதித்துள்ளது. நிலைமை சீராவதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. 

ஹிஜாப் தொடர்பாக முஸ்லிம் மாணவிகளால் தாக்கல் செய்யப்பட்டிருந்த 7 மனுக்கள், 2 இடைசேர்ப்பு மனுக்களையும் கூடுதல் அமர்வுக்கு மாற்றி கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித் புதன்கிழமை உத்தரவிட்டிருந்தார். அதன்படி, கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித்,  நீதிபதி காஜி ஜெய்புனிசா மொய்தீன் ஆகியோர் அடங்கிய கூடுதல் அமர்வு அமைக்கப்பட்டது.

இந்த மனுக்களை இந்தக் கூடுதல் அமர்வு வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாநிலத்தில் அமைதியும் நிம்மதியும் திரும்ப வேண்டும். கல்வி நிறுவனங்களைத் திறக்க வேண்டும். பள்ளிகள், கல்லூரிகளுக்கு மத அடையாளங்களுடன் வருமாறு மாணவர்களை வற்புறுத்தக் கூடாது. கல்விப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும். 

நீதிமன்றத்தின் முன்பாக இருக்கும் வழக்கை விரைவாக விசாரிக்க உள்ளோம். மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் ஏற்பாடு செய்யப்படும். எவ்விதத் தொந்தரவும் இல்லாமல் கல்வி நிறுவனங்கள் உடனடியாகத் திறக்கப்பட வேண்டும். 

இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரையில், தற்போதைக்கு பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஹிஜாப் அல்லது காவித்துண்டு போன்றவற்றை அணிந்துகொண்டு மாணவர்கள் வரக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், ஹிஜாப் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்க பதிவில், "நாட்டின் ஆன்மாவை அவமதிக்காதீர்கள். நமது மாநிலங்கள், நமது மக்கள், நமது மொழிகள், நமது கலாச்சாரங்கள், நமது பன்முகத்தன்மை இவையெல்லாம் நமது பலமாக இருக்கிறது. 

காஷ்மீர் முதல் கேரளம் வரை, குஜராத் முதல் மேற்குவங்கம் வரை நாடு அதன் அனைத்து வண்ணங்களால் அழகாக இருக்கிறது" என ராகுல் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com