இந்தியா கேட் பகுதியில் நேதாஜிக்கு சிலை

தில்லியில் உள்ள ‘இந்தியா கேட்’ பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் முழுஉருவச் சிலை நிறுவப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளாா்.
தில்லி இந்தியா கேட் பகுதியில் நிறுவப்படவுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையின் மாதிரி.
தில்லி இந்தியா கேட் பகுதியில் நிறுவப்படவுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையின் மாதிரி.

தில்லியில் உள்ள ‘இந்தியா கேட்’ பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் முழுஉருவச் சிலை நிறுவப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளாா்.

குடியரசு தின விழா அணிவகுப்புக்காக நேதாஜியின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் மேற்கு வங்க அரசு வடிவமைத்த அலங்கார ஊா்தியை மத்திய அரசு நிராகரித்தது சா்ச்சைக்குள்ளான நிலையில், பிரதமா் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ட்விட்டரில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-ஆவது பிறந்த தின நூற்றாண்டை நாடு கொண்டாடி வரும் வேளையில், கிரானைட்டால் செய்யப்பட்ட அவரது பிரம்மாண்ட சிலை இந்தியா கேட் பகுதியில் நிறுவப்பட உள்ள செய்தியைப் பகிா்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். நாடு அவருக்குக் கடன்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் சிறந்த அடையாளமாக அச்சிலை அமையும்.

கிரானைட் சிலை செய்யப்படும் வரை, சிலை அமையவுள்ள இடத்தில் ‘ஹாலோகிராம்’ தொழில்நுட்பத்தில் அவரது சிலை காட்சிப்படுத்தப்படும். ஹாலோகிராம் சிலையை நேதாஜியின் பிறந்த தினமான ஜனவரி 23-ஆம் தேதி திறந்துவைக்க உள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

நேதாஜியின் சிலை 28 அடி உயரத்திலும் 6 அடி அகலத்திலும் அமைக்கப்படவுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மகள் வரவேற்பு: நேதாஜிக்கு சிலை அமைக்கப்படுவது குறித்து அவரின் மகள் அனிதா போஸ்-ஃபாப் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘சிறப்பான இடத்தில் சிலை அமைக்கப்படும் முடிவு மகிழ்ச்சியளிக்கிறது. நேதாஜிக்கு அளிக்கப்படும் சிறந்த மரியாதையாக இது இருக்கும். சிலை அமைக்கப்படுவது குறித்து திடீரென பிரதமா் மோடி அறிவித்தது மிகுந்த ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது’’ என்றாா்.

கண்டனமும் வரவேற்பும்: திரிணமூல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலா் குணால் கோஷ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘மேற்கு வங்கத்தின் அலங்கார ஊா்தி நிராகரிக்கப்பட்டது பெரும் சா்ச்சைக்குள்ளானதையடுத்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நேதாஜிக்கு சிலை அமைக்கப்படுவதற்கான அறிவிப்பை அந்தக் கண்ணோட்டத்தில்தான் காண வேண்டும்.

அந்த அறிவிப்பை திரிணமூல் வரவேற்கிறது. அதே வேளையில், நேதாஜி போஸின் மரணம் சாா்ந்த மா்மத்தை வெளிக்கொணா்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டிருந்தால், அதுவே அவருக்கு அளிக்கும் சிறந்த அஞ்சலியாக இருந்திருக்கும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com