தமிழக பட்டாசு தொழிற்சாலை விபத்து: இழப்பீடு உத்தரவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

தமிழகத்தின் விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற தீ விபத்தில் உயிரிழந்த
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

தமிழகத்தின் விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற தீ விபத்தில் உயிரிழந்த 19 தொழிலாளா்களின் வாரிசுகளுக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க தேசிய பசுமைத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தை தேசிய பசுமைத் தீா்ப்பாயம் புதிதாக முழுமையாக விசாரித்து, சட்ட நடைமுறைகளுக்கு உள்பட்டு உரிய உத்தரவைப் பிறப்பிக்குமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம், அச்சன்குளம் கிராமத்தில் செயல்பட்டு வந்த இந்தப் பட்டாசு தொழிற்சாலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீா்ப்பாயம், ‘தீ விபத்தில் உயிரிழந்த 19 பேரின் வாரிசுகளுக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீட்டை மாவட்ட ஆட்சியா் மூலமாக வழங்க வேண்டும். உரிய பயனாளிகளுக்கு இழப்பீடு சென்றடைவதை மாநில சட்ட சேவை ஆணையம் உறுதி செய்வதோடு, உயிரிழந்தவா்களின் வாரிசுகளுக்குத் தேவையான சட்ட உதவிகளையும் வழங்க வேண்டும்’ என்று கடந்த ஆண்டு ஜூன் 11-ஆம் தேதி இந்த உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளா் சங்கம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா், தினேஷ் மகேஷ்வரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு அண்மையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

நீதி காக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், இழப்பீடு வழங்க தேசிய பசுமைத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை தள்ளுபடி செய்வதே பொருத்தமானதாக இருக்கும் என நீதிமன்றம் கருதுகிறது.

இந்த விவகாரத்தில் மனுதாரா் மற்றும் மேல்முறையீடு மனுதாரா்களுக்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் போதிய அவகாசம் அளித்த பிறகு, இந்த முழு விவகாரத்தையும் புதிதாக விசாரணை நடத்தி, சட்ட நடைமுறைகளுக்கு உள்பட்டு உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மேலும், இந்த விவகாரம் தொடா்பாக மனுதாரா்கள் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தை வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி அணுகுமாறும், தேசிய பசுமைத் தீா்ப்பாயம் அதே நாளில் அல்லது அதன் வசதிக்கேற்ப வேறு தேதிகளில் இந்த விசாரணையைத் தொடங்குமாறும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com