நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் திங்கள்கிழமை (ஜன. 31) தொடங்கியது.
நாட்டில் கரோனா தொற்று பரவி வரும் நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. ஆண்டின் முதலாவது கூட்டத்தொடா் என்பதால், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியது:
தங்கள் கடமைகளுக்கு முன்னுரிமை அளித்து இந்தியா தனது உரிமைகளைப் பெற உதவிய லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். சுதந்திரத்தின் 75 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பங்களித்த ஆளுமைகளையும் நான் மரியாதையுடன் நினைவுகூருகிறேன்.
இந்த ஆண்டை, நேதாஜியின் பிறந்தநாளான ஜனவரி 23-ஆம் தேதி முதல் குடியரசு தின விழாவை அரசு தொடங்கியுள்ளது. வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்த நாளும் இந்தாண்டு கொண்டாடப்படவுள்ளன. நாட்டின் பாதுகாப்பான எதிர்காலத்திற்கு கடந்த காலத்தை நினைவில் வைத்துக் கொள்வதும், அதிலிருந்து கற்றுக்கொள்வதும் மிகவும் முக்கியம் என அரசு நம்புகிறது.
கரோனாவால் பலர் பலியாகினர். அந்த சூழலிலும், ஒரு குழுவாக மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள், விஞ்ஞானிகள் பணியாற்றினர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா 150 கோடி தடுப்பூசிகளை செலுத்தி உலகளவில் முதலிடத்தில் உள்ளது.
கரோனா தடுப்பூசிகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதால் பல உயிர்கள் பாதுகாக்கப்பட்டன. கரோனாவை கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டன. மத்திய அரசு 25 ஆண்டுகள் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எளிதில் சிகிச்சை பெற சுகாதார கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டன. கடந்த காலத்தைவிட தற்போது இந்திய சுகாதார அமைப்பின் கட்டமைப்பு பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளன. ஆயிஷ்மான் திட்டங்கள் ஏழைகள் சுகாதார வசதிகளை பெற உதவியாக உள்ளது.
மத்திய அரசின் உணவு சேமிப்புக் கிடங்குகள் விவசாயிகளுக்கு பெரும் உதவியை செய்துள்ளன. கரோனா காலத்தில் எவ்வித தாமதமும் இன்றி விவசாயிகளுக்கான மானியங்கள் வழங்கப்பட்டன. சிறு விவசாயிகளுக்கு உதவுவது தான் மத்திய அரசின் திட்டங்களின் நோக்கம்.
நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவின் பாரம்பரிய மழைநீர் சேமிப்புகளை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் திட்டம் பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்துள்ளன.
5ஜி திட்டங்களை கொண்டு வருவதில் இந்தியா முன்னிலையில் உள்ளன. ஸ்டார்ட் அப் திட்டங்கள் இந்தியாவில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இதன்மூலம் 6 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைத்துள்ளன.
சிறு, குறு தொழில்கள் தான் இந்தியாவின் முதுகெழும்பாக இருக்கின்றன.
மேலும், ‘கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி கல்வித் திட்டங்கள் குறித்து பேசினார்.
குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு 5வது முறையாக நிதிநிலை அறிக்கைக்கு முன்னதாக ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இந்தாண்டுடன் அவரது பதவிக் காலம் முடிவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கரோனா தொற்று பரவல் காரணமாக நாடாளுமன்றத்தின் மைய மண்டபம், மக்களவை, மாநிலங்களவை அரங்குகளில் சமூக இடைவெளியுடன் எம்.பி.க்கள் அமர்ந்துள்ளனா். குடியரசுத் தலைவா் உரைக்கு பிறகு, 2021-22-ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளாா்.
2022-23-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது.
குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதம் புதன்கிழமை (பிப். 2) தொடங்கும். அந்த விவாதத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி பிப். 7-ஆம் தேதி பதிலளிப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.