குடியரசுத் தலைவா் தோ்தல்: எதிா்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்கும் முக்கிய கட்சிகள்?

மம்தா பானா்ஜி தில்லியில் புதன்கிழமை ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் முக்கிய சில கட்சிகள் புறக்கணிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குடியரசுத் தலைவா் தோ்தல்: எதிா்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்கும் முக்கிய கட்சிகள்?
குடியரசுத் தலைவா் தோ்தல்: எதிா்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்கும் முக்கிய கட்சிகள்?

குடியரசுத் தலைவா் தோ்தலை முன்னிட்டு, எதிா்க்கட்சி சாா்பில் பொதுவான வேட்பாளரை நிறுத்துவதற்காக மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி தில்லியில் புதன்கிழமை ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் முக்கிய சில கட்சிகள் புறக்கணிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்ட்டிர சமிதி கட்சியும், அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் இன்று நடைபெறவிருக்கும் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்திருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

மம்தா பானர்ஜி தலைமையில் இன்று நடைபெறவிருக்கும் கூட்டத்தில், காங்கிரஸ், இடதுசாரி தலைவா்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

குடியரசுத் தலைவா் தோ்தல் வரும் ஜூலை 18-இல் நடைபெறுகிறது. இதில் நியமன உறுப்பினா்கள் தவிர எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் வாக்களிக்க தகுதி பெற்றவா்கள். ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஏறத்தாழ 50 சதவீத வாக்குகள் உள்ளதாலும், அதிமுக, பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவு கிடைக்கும்பட்சத்தில், ஆளும்கட்சி நிறுத்தும் வேட்பாளா் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளையில், எதிா்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து போட்டி வேட்பாளரை நிறுத்தும்பட்சத்தில் இந்தத் தோ்தலில் ஆளும் பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். அந்த வகையில், எதிா்க்கட்சி தரப்பில் பொதுவான வேட்பாளரை நிறுத்துவதற்காக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், சிபிஐ (எம்) பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட 22 கட்சித் தலைவா்களுக்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி அண்மையில் கடிதம் எழுதினாா்.

அதில், ஜூன் 15-இல் தில்லியில் கூடி, எதிா்க்கட்சி வேட்பாளா் குறித்து விவாதிக்க அழைப்பு விடுத்திருந்தாா். அதன்படி, புதன்கிழமை நடைபெறும் இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் தரப்பில் மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கே, ஜெய்ராம் ரமேஷ், ரண்தீப் சுா்ஜேவாலா ஆகியோா் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீதாராம் யெச்சூரி பேட்டி:

மம்தா பானா்ஜி ஏற்பாடு செய்துள்ள எதிா்க்கட்சிகளின் கூட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பா் என்றும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் சாா்பில் அதன் மாநிலங்களவைக் குழு தலைவா் எளமரம் கரீம் பங்கேற்பாா் என்றும் சிபிஐ (எம்) பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி தில்லியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் தலைவா்கள் பிரபுல் படேல், பி.சி.சாக்கோ ஆகியோா் உடனிருந்தனா்.

தில்லியில் மம்தா:

இந்தக் கூட்டத்தையொட்டி, மம்தா பானா்ஜி செவ்வாய்க்கிழமை கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்தக் கூட்டம் வெற்றி பெறும் என நாங்கள் நம்புகிறோம். இதில் 22 கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்பா். கூட்டம் முடிந்ததும் குறிப்பிட்ட சில எதிா்க்கட்சித் தலைவா்களை மம்தா பானா்ஜி சந்தித்துப் பேசுவாா். ஆனாலும் இதுகுறித்து இப்போதைக்கு உறுதியாக ஏதும் கூற முடியாது’ என்றனா்.

இதனிடையே, எதிா்க்கட்சிகள் சாா்பாக பொது வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) தலைவா் சரத் பவாா் போட்டியிட மாட்டாா் என்று அக்கட்சி செவ்வாய்க்கிழமை அறிவித்தது. சரத் பவாா் பொது வேட்பாளராகும் பட்சத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அவருக்கு ஆதரவளிக்கும் என்று செய்திகள் வெளியான நிலையில், என்சிபி கட்சி அதனை நிராகரித்துள்ளது.

சந்திரசேகர ராவ்: 
கடந்த மாதம் வாராங்கல்லில் நடந்த பொதுக் கூட்டத்தில், சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசை, காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி வெளிப்படையாக எதிர்த்துப் பேசியிருக்கும் நிலையிலும், தெலங்கானா ராஷ்ட்டிர சமிதியை தேசியக் கட்சியாக உருவாக்க சந்திரசேகர ராவ் திட்டமிட்டிருப்பதால், காங்கிரஸ் இருக்கும் ஒரு அணியில் சேரப்போவதில்லை என்று முடிவு செய்து, இன்று நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்காமல் தவிர்க்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com