கோயில் வளாகத்தைக் கூட்டி சுத்தம் செய்த திரௌபதி முர்மு

குடியரசுத் தலைவர் தேர்தல் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு, கோயில் வளாகத்தைக் கூட்டி சுத்தம் செய்தார்.
கோயில் வளாகத்தைக் கூட்டி சுத்தம் செய்த திரௌபதி முர்மு
கோயில் வளாகத்தைக் கூட்டி சுத்தம் செய்த திரௌபதி முர்மு

கோயில் வளாகத்தைக் கூட்டி சுத்தம் செய்த திரௌபதி முர்மு
தனது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் ஒடிசா மாநிலம் ரெய்ரங்பூர் பகுதியில் உள்ள ஜெகந்நாதர், ஹனுமன், சிவன் கோயில்களுக்குச் சென்ற குடியரசுத் தலைவர் தேர்தல் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு, கோயில் வளாகத்தைக் கூட்டி சுத்தம் செய்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு (64) போட்டியிடுவார் என்று அக்கட்சி செவ்வாய்க்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில், தில்லி புறப்படுவதற்கு முன்பு, தான் முதன் முதலாக 2000ஆவது ஆண்டில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்ற ரெய்ரங்பூர் பகுதியில் உள்ள பல்வேறு கோயில்களுக்கும் சென்று திரௌபதி முர்மு வழிபாடு நடத்தினார்.

புரந்தேஸ்வரி சிவன் கோயிலுக்குச் சென்ற அவர், அங்கு கோயில் வளாகத்தைக் கூட்டி சுத்தம் செய்தார். வழிபாடுகளை முடித்துக் கொண்டு அவர் புவனேஸ்வரம் வழியாக தில்லி வந்து, சனிக்கிழமை குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யவிருக்கிறார்.

குடியரசுத் தலைவராக இவர் தேர்வானால் நாட்டின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெறுவார்.

குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடியினப் பெண் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் அவரது சொந்த மாநிலமான ஒடிஸாவில் மட்டுமின்றி நாடு முழுவதும் அவருக்கு ஆதரவு கிடைக்கும் என்று பாஜக கருதுகிறது.

மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறாத கட்சிகளான, ஒடிஸாவில் ஆளும் பிஜு ஜனதா தளம், ஜார்க்கண்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகியவற்றின் ஆதரவும் கிடைக்கும் என்று பாஜக எதிர்பார்க்கிறது.

பாஜக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதற்கிடையே, நேற்று இரவு இது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வரும் 29-ஆம் தேதி கடைசி நாளாகும்.

இந்நிலையில், பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான அக்கட்சியின் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் கட்சித் தலைவர் ஜெ.பி. நட்டா தலைமையில் தில்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உள்பட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.பி. நட்டா, "நாடு முழுவதும் உள்ள சுமார் 20 முக்கியப் பிரமுகர்களின் பெயர்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கிழக்கு இந்தியாவில் இருக்கும் தலைவருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காக ஒடிஸாவை சேர்ந்த பழங்குடியினப் பெண் தலைவரான திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார். தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்த பின்புதான் திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டார்' என்றார்.

ஒடிஸாவின் மிகவும் பின்தங்கிய மாவட்டமான மயூர்பஞ்சில் உள்ள பய்டாபோசி கிராமத்தில் 1958, ஜூன் 20-ஆம் தேதி திரௌபதி முர்மு பிறந்தார். சாந்தல் பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்தவரான திரௌபதி தனது அரசியல் வாழ்க்கையை மாநகராட்சி கவுன்சிலராக தொடங்கினார். ராய்ரங்பூர் தேசிய ஆலோசனை கவுன்சில் துணைத் தலைவராகப் பதவி வகித்தார்.

2013-இல் பாஜக பழங்குடியினர் பிரிவின் துணைத் தலைவராக திரௌபதி முர்மு பதவி வகித்துள்ளார். ஒடிஸாவின் ராய்ரங்பூர் தொகுதியில் இருந்து பாஜக எம்எல்ஏவாக அவர் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார்.

பாஜக கூட்டணியுடன் பிஜு ஜனதாதளம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது முதல்வர் நவீன் பட்நாயக் அரசில் 2000-2004 வரையில் திரௌபதி முர்மு அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். வர்த்தகம், போக்குவரத்து, மீன், கால்நடைத் துறைகளின் அமைச்சராக அவர் இருந்துள்ளார்.

2015, மே 18-இல் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக திரௌபதி முர்மு பொறுப்பேற்றார். 2021, ஜூலை 12 வரை ஆளுநர் பதவியை அவர் வகித்தார்.

2017 குடியரசுத் தலைவர் தேர்தலின்போதும் திரௌபதி முர்முவின் பெயர் பரிசீலனையில் இருந்தது. எனினும், அப்போதைய பிகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

திரௌபதி முர்முவின் கணவர் ஷியாம் சரண் முர்மு, இரண்டு மகன்கள் உயிரிழந்துவிட்டனர். அவருக்கு மகள் மட்டும் உள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com