ஒரே குடும்பத்தில் 9 பேர் மரணம்.. திடீர் திருப்பம்? தற்கொலைக் கடிதத்தால் சிக்கிய குற்றவாளி

மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் தற்கொலையாக இருக்கலாம் என்று கருதப்பட்டு வந்த நிலையில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள
ஒரே குடும்பத்தில் 9 பேர் மரணத்தில் திடீர் திருப்பம்? தற்கொலைக் கடிதத்தால் சிக்கிய குற்றவாளி
ஒரே குடும்பத்தில் 9 பேர் மரணத்தில் திடீர் திருப்பம்? தற்கொலைக் கடிதத்தால் சிக்கிய குற்றவாளி

மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் தற்கொலையாக இருக்கலாம் என்று கருதப்பட்டு வந்த நிலையில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 9 பேரும் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்ததைத் தொடர்ந்து, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், முக்கிய குற்றவாளி அப்பாஸ் மொஹம்மது அலி பகவான்தான், அந்த ஒட்டுமொத்தக் குடும்பத்தையும், ஜூன் 19ஆம் தேதி இரவு தேநீரில் விஷம் கலந்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது. சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் வாழ்ந்து வந்த இரு சகோதரர்களின் வீட்டுக்கும் ஒன்றன்பின் ஒன்றாகச் சென்று விஷம் கலந்து கொடுத்து கொலை செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தன்னிடம் கடன் வாங்கியிருந்த தீரஜ் என்ற நபரை, கொலைக்கு உதவினால், வாங்கியக் கடனை திருப்பித் தர வேண்டாம் என்று ஆசை வார்த்தைக் கூறி கொலைக்கு உடந்தையாக வைத்திருந்த நிலையில் அவரும் கைதாகியுள்ளார்.

இரண்டு சகோதர்களின் குடும்பத்தினர்தான் இந்த சதிக்கு பலியானவர்கள். கொலை செய்யப்பட்டவர்களில் ஒரு சகோதரர் ஆசிரியராகவும், மற்றொருவர் கால்நடை மருத்துவராகவும் இருந்தனர். இவர்கள் அனைவரும் தங்களது வீட்டில் ஜூன் 20ஆம் தேதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். இவர்களது 74 வயது தாய், மனைவிகள் மற்றும் நான்கு குழந்தைகள் என 9 பேரும் வீட்டின் பல்வேறு பகுதிகளில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.

கடன் தொல்லையால் இவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி, இவர்களுக்குக் கடன் கொடுத்திருந்தவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இதற்கிடையே, இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் தனக்கு மந்திரம் தெரியும் என்று கூறி, குற்றவாளி பகவான், பூமியில் புதைந்திருக்கும் புதையலை எடுத்துத் தருவதாக ஏமாற்றி, உயிரிழந்த குடும்பத்திடமிருந்து ஏராளமான பணத்தை மோசடி செய்துள்ளார். ஆனால் புதையலை எடுத்துக் கொடுக்காததால், அவர்கள் பணத்தை திரும்பக் கேட்டு தொல்லை கொடுத்ததால், அவர்களை கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

பலியான குடும்பத்தினர் சுமார் ஒரு கோடி அளவுக்கு பகவானுக்குக் கொடுத்து ஏமாந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

குற்றவாளியை அடையாளம் காட்டிய தற்கொலைக் கடிதம்

இரண்டு சகோதரர்களின் வீடுகளில் இருந்தும் தற்கொலைக் கடிதங்கள் கைப்பற்றப்பட்டன. அதில், தங்களுக்குக் கடன் கொடுத்தவர்களின் பெயர்களை எழுதி, இவர்கள் துன்புறுத்தியிருந்ததாகக் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து காவலர்கள் கூறுகையில், பொதுவாக, ஒரு தற்கொலைக் கடிதம் என்பது, முதலில் தாங்கள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறோம் என்பது பற்றித்தான் எழுதி பிறகு அதற்குக் காரணமானவர்களைக் குறிப்பிடுவார்கள். இந்த வழக்கில், எடுத்த எடுப்பிலேயே சிலரின் பெயர்களைக் குறிப்பட்டு, தற்கொலைக் கடிதம் தொடங்கியது. அது மட்டுமல்ல, தாங்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறோம் என்று அதில் குறிப்பிடப்படவேயில்லை. எனவே, இந்த சம்பவத்தில் சந்தேகம் ஏற்பட்டு, தற்கொலையாக இருக்காது என்று முடிவு செய்து விசாரணை நடத்தினோம்.

அன்றைய தினம் யாரெல்லாம் வீட்டுக்கு வந்திருந்தார்கள் என்ற சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆராய்ந்ததில் குற்றவாளிகள் சிக்கினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com