
மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார்.
மகாராஷ்டிரத்தில் சிவசேனை- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு இருந்து வரும் நிலையில், சிவசேனை மூத்த தலைவா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள், அரசுக்கு எதிராகப் போா்க்கொடி தூக்கினர். தனது தரப்பில் 50 எம்எல்ஏக்கள் இருப்பதாக ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பல்வேறு கட்ட அரசியல் நகர்வுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறவிருந்த நிலையில், உத்தவ் தாக்கரே நேற்று தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். உத்தவ் தாக்கரேவின் ராஜிநாமாவை ஏற்பதாக மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரி இன்று அறிவித்தார். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று தவிர்க்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, பாஜக மூத்தத் தலைவரும் மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநர் பகத்சிங் கோஷரியை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.
ஏக்நாத் ஷிண்டேவும் பிற எம்எல்ஏக்களும் அவருடன் சென்று ஆளுநரிடம் ஆதரவுக் கடிதம் அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, பட்னாவிஸ் முதல்வராகவும் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராகவும் பதவியேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் ராஜிநாமா: நம்பிக்கை வாக்கெடுப்பைத் தவிர்த்தார்