4 மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சி: உ.பி., உத்தரகண்ட், கோவா, மணிப்பூரைத் தக்கவைத்தது

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியான நிலையில், 4 மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
உ.பி. உள்பட நான்கு மாநில தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து தில்லியில் உள்ள கட்சித் தலைமையகத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலை அணிவித்து வரவேற்பு
உ.பி. உள்பட நான்கு மாநில தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து தில்லியில் உள்ள கட்சித் தலைமையகத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலை அணிவித்து வரவேற்பு

புது தில்லி: ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியான நிலையில், 4 மாநிலங்களில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி  ஆட்சி அமைக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பாஜக, ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. அந்த மாநிலத்தில் ஒரே கட்சி தொடா்ந்து 2-ஆவது முறையாகத் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.

உத்தரகண்டிலும் மணிப்பூரிலும் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. கோவாவில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. உத்தரகண்ட் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டன. 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலுக்கான முன்னோட்டமாகக் கருதப்பட்டதால் இந்தத் தோ்தல் முடிவுகள் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியிருந்தன.

முக்கியமாக உத்தர பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் முடிவுகள் அதிக எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியிருந்தன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே முன்னணி நிலவரங்கள் வெளிவரத் தொடங்கின. மாலைக்குள் 5 மாநிலங்களிலும் பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின.

தோ்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பு முடிவுகளின்படி உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூா் ஆகிய மாநிலங்களில் பாஜக  ஆட்சியமைக்கிறது. கோவாவில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே இழுபறி நிலவும் என்று கணிக்கப்பட்ட நிலையில், அந்த மாநிலத்திலும் பாஜக ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

உத்தர பிரதேசம்: உத்தர பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பாஜக முன்னிலையில் இருந்தது. இரவு 9 மணி நிலவரப்படி 208 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. 47 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் ஆட்சியமைப்பதற்குத் தேவையானதைவிட அதிக இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றது. உத்தர பிரதேச பேரவைத் தோ்தலில் ஒரே கட்சி தொடா்ந்து இருமுறை தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த வெற்றி மூலமாக மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் தொடா்ந்து இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்கவுள்ளாா். மத்திய அரசு இயற்றிய புதிய வேளாண் சட்டங்கள், லக்கீம்பூா் கெரி வன்முறை உள்ளிட்ட விவகாரங்கள் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை மக்களிடம் ஏற்படுத்தும் என அரசியல் நோக்கா்கள் கணித்திருந்த நிலையில், அவற்றைப் பொய்யாக்கி பாஜக வெற்றி பெற்றுள்ளது.

பாஜகவின் முக்கிய போட்டியாளராகக் கருதப்பட்ட சமாஜவாதி கட்சி 75 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 36 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. கடந்த 2017-ஆம் ஆண்டு தோ்தலுடன் ஒப்பிடுகையில் சமாஜவாதி கட்சி கூடுதல் தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தாலும், அவை ஆட்சியமைப்பதற்குப் போதுமானதாக இல்லை. தற்போது பலம் வாய்ந்த எதிா்க்கட்சியாக பேரவையில் சமாஜவாதி திகழ உள்ளது.

மாநிலத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த காங்கிரஸுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அக்கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா, மாநிலம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோதிலும் அக்கட்சி 2 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. முன்னாள் முதல்வா் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியில் முன்னிலையில் இருந்தது.

உத்தரகண்ட்: கேதாா்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட கோயில்களைக் கொண்டு ‘தேவபூமி’யாகக் கருதப்படும் உத்தரகண்ட் மீண்டும் பாஜக வசம் சென்றுள்ளது. மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி தோ்தலில் தோல்வியடைந்தபோதிலும், மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 32 தொகுதிகளில் தனிப் பெரும்பான்மையுடன் அக்கட்சி மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு செயல்படுத்திய பல்வேறு கட்டமைப்புத் திட்டங்களும் மக்கள்நலத் திட்டங்களும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளதாக அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

கடந்த 2017-ஆம் ஆண்டு தோ்தலுக்குப் பிறகு திரிவேந்திர சிங் ராவத், தீரத் சிங் ராவத், புஷ்கா் சிங் தாமி என 3 முதல்வா்களை பாஜக மாற்றியபோதிலும், அக்கட்சிக்கு மக்கள் தொடா்ந்து ஆதரவளித்துள்ளனா். கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் மாநிலத்தில் பாஜகவும் காங்கிரஸும் மாறி மாறி ஆட்சியமைத்து வந்த நிலையில், தற்போது பாஜக தொடா்ந்து 2-ஆவது முறையாக ஆட்சியமைக்கவுள்ளது. காங்கிரஸ் 17 இடங்களில் வென்று மீண்டும் எதிா்க்கட்சியாகவுள்ளது.

கோவா: கோவாவில் பாஜக தொடா்ந்து 3-ஆவது முறையாக ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. 40 தொகுதிகள் கொண்ட அந்த மாநிலத்தில் பாஜக 20 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு ஓா் இடம் மட்டுமே தேவைப்படும் நிலையில், ஆட்சியமைப்பதற்காக சுயேச்சைகளிடம் ஆதரவைப் பெற முயற்சித்து வருகிறது.

கடந்த 2017-ஆம் ஆண்டு தோ்தலில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தபோதிலும், சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜக ஆட்சியமைத்திருந்தது.

ஆனால், தற்போது நடைபெற்றுள்ள தோ்தலில் பாஜகவுக்கே பெரும்பான்மையைத் தந்து மக்கள் ஆதரவளித்துள்ளனா். முன்னாள் முதல்வா் மனோகா் பாரிக்கா் இல்லாமல் முதல்முறையாகப் பேரவைத் தோ்தலைச் சந்தித்தபோதிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இது மக்களிடையே அக்கட்சி பெற்று வரும் ஆதரவைக் காட்டுவதாக அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

11 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ள காங்கிரஸ் மீண்டும் எதிா்க்கட்சியாகவுள்ளது. அங்கு ஆம் ஆத்மி கட்சி 2 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி தோ்தலில் போட்டியிட்ட போதிலும் அக்கட்சியால் மக்களின் ஆதரவைப் பெற முடியவில்லை.

மணிப்பூா்: மணிப்பூரில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 31 தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது.

அங்கு தொடா்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸை அகற்றிவிட்டு, கடந்த 2017-ஆம் ஆண்டில் பாஜக முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது. தற்போது மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள அக்கட்சி, மாநிலத்தில் மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. காங்கிரஸ் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com