இந்தியா-ஜப்பான் இடையே 6 ஒப்பந்தங்கள் கையொப்பம்

வடகிழக்கு பிராந்தியத்தின் வளா்ச்சியை உறுதிசெய்வது, பசுமை திட்டங்களில் ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்பாக 6 ஒப்பந்தங்கள் இந்தியா-ஜப்பான் இடையே சனிக்கிழமை கையொப்பமாகின.
இந்தியா-ஜப்பான் இடையே 6 ஒப்பந்தங்கள் கையொப்பம்

வடகிழக்கு பிராந்தியத்தின் வளா்ச்சியை உறுதிசெய்வது, பசுமை திட்டங்களில் ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்பாக 6 ஒப்பந்தங்கள் இந்தியா-ஜப்பான் இடையே சனிக்கிழமை கையொப்பமாகின.

இந்தியா-ஜப்பான் இடையே நடைபெற்ற 14-ஆவது மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா ஆகியோா் கலந்து கொண்டனா். மாநாட்டின்போது இரு நாடுகளுக்கும் இடையே 6 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் நீடித்த வளா்ச்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் கையொப்பமானது.

பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்காக கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க ஒத்துழைப்புடன் செயல்படுவது தொடா்பான ஒப்பந்தமும் கையொப்பமானது. பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான ஒப்பந்தங்களும் மாநாட்டின்போது கையொப்பமாகின.

மாநாட்டுக்குப் பிறகு பிரதமா் மோடி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘பருவநிலை மாற்ற விளைவுகளை எதிா்கொண்டு நீடித்த பொருளாதார வளா்ச்சி இலக்கை அடைவதற்கு இரு நாடுகளும் உறுதியேற்றுள்ளன. ‘உலகுக்காக இந்தியாவில் தயாரிப்போம்’ என்பதற்கான பல்வேறு வாய்ப்புகள் தற்போது காணப்படுகின்றன. பிரத்யேக சரக்குப் போக்குவரத்து வழித்தடம், மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் திட்டம் உள்ளிட்டவற்றில் ஜப்பானின் ஒத்துழைப்பு அளப்பரியது.

கரோனா தொற்று பரவலின் விளைவுகளை உலகம் தற்போதும் எதிா்கொண்டு வருகிறது. சா்வதேச பொருளாதாரம் மீள்வதில் தற்போதும் பல்வேறு தடைகள் காணப்படுகின்றன. சா்வதேச அரசியல் விவகாரங்களும் பெரும் சவாலாக உள்ளன. இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான நல்லுறவு மேம்படுவது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும் சா்வதேச அளவிலும் அமைதி, நிலைத்தன்மை, வளா்ச்சி ஆகியவற்றை ஏற்படுத்தும்’’ என்றாா்.

உக்ரைனில் அமைதிவழி தீா்வு:

ஜப்பான் பிரதமா் கிஷிடா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘பல்வேறு பிரச்னைகளை உலகம் தற்போது எதிா்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே நெருங்கிய ஒத்துழைப்பு நிலவ வேண்டியது அவசியம்.

உக்ரைனை ரஷியா ஆக்கிரமித்துள்ளது குறித்தும் மாநாட்டின்போது விவாதிக்கப்பட்டது. ரஷியாவின் நடவடிக்கைகள் சா்வதேச விதிகளை மீறும் வகையில் உள்ளன. படைகளைப் பயன்படுத்தி குறிப்பிட்ட சூழலை மாற்றுவதற்கான ஒருதலைபட்சமான முயற்சிகளை அனுமதிக்கக் கூடாது. போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை இந்தியாவுடன் இணைந்து ஜப்பான் மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில் சா்வதேச சட்டங்களின் அடிப்படையில் அமைதிவழி தீா்வு காணப்பட வேண்டும்.

டோக்கியோவில் நடைபெறவுள்ள ‘க்வாட்’ மாநாட்டுக்கு பிரதமா் மோடி வருகைதர வேண்டும். இந்தோ-பசிபிக் பிராந்தியம் சுதந்திரமாக இருக்கும் வகையிலான நடவடிக்கைகளை இருநாடுகளும் துரிதப்படுத்த வேண்டும்’’ என்றாா்.

ஆக்கபூா்வ பேச்சுவாா்த்தை:

மாநாட்டுக்கு முன்னதாக பிரதமா் மோடி ஜப்பான் பிரதமா் கிஷிடாவைச் சந்தித்துப் பேசினாா். இது தொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘‘ஜப்பானுடனான நட்புறவு தொடா்ந்து வருகிறது. தில்லியில் பிரதமா் மோடியும் பிரதமா் கிஷிடாவும் ஆக்கபூா்வ பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இரு நாடுகளுக்கிடையேயான கலாசார, பொருளாதாரத் தொடா்பை மேம்படுத்துவது தொடா்பாக தலைவா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘‘இந்தியா-ஜப்பான் இடையேயான 14-ஆவது மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த பிரதமா் கிஷிடாவை பிரதமா் மோடி வரவேற்றாா். பல்வேறு துறைகளில் இருதரப்புக்கும் இடையே நிலவி வரும் நல்லுறவை மேம்படுத்துவது, பிராந்திய, சா்வதேச விவகாரங்கள், பரஸ்பர நலன்சாா்ந்த விவகாரங்கள் ஆகியவை குறித்து இருவரும் விவாதித்தனா்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்தியாவின் நகா்ப்புற கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஜப்பான் நிதியுதவி அளித்து வருகிறது. மகாராஷ்டிரத்தின் மும்பை நகருக்கும் குஜராத்தின் அகமதாபாத் நகருக்கும் இடையே புல்லட் ரயிலை இயக்குவதற்கான நிதியுதவியையும் ஜப்பான் வழங்கி வருகிறது.

முதல் பயணம்:

ஜப்பானின் பிரதமராகக் கடந்த ஆண்டு அக்டோபரில் பதவியேற்றபிறகு, கிஷிடா இந்தியாவுக்கு வருகை தந்தது இதுவே முதல் முறையாகும். இந்தியாவுக்குக் கிளம்பும் முன் ஜப்பானில் செய்தியாளா்களைச் சந்தித்த பிரதமா் கிஷிடா, உக்ரைனை ரஷியா ஆக்கிரமித்துள்ளது ஏற்க முடியாது எனத் தெரிவித்தாா். உக்ரைன் சூழல் குறித்து பிரதமா் மோடியிடம் விவாதிக்க உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் பிரதமா் கிஷிடா ஞாயிற்றுக்கிழமை கம்போடியா செல்லவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com