கர்நாடகத்தில் இஸ்லாமியர்கள் கடை நடத்தத் தடை? ஹிஜாப் விவகாரத்தை தொடர்ந்து புதிய சர்ச்சை

கர்நாடகத்தில் இந்து மத திருவிழாவில் இஸ்லாமியர்கள் கடை நடத்த விதிக்கப்பட்டுள்ள தடை புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

கர்நாடகத்தில் இந்து மத திருவிழாவில் இஸ்லாமியர்கள் கடை நடத்த விதிக்கப்பட்டுள்ள தடை புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தெற்கு கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகளில் கோடி மாரிகாம்பா ஜாத்ரா திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ந்து 5 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் சாதி, மத வித்தியாசங்களின்றி பலரும் பங்கெடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் திருவிழா பகுதிகளில் கடைகள் அமைப்பதற்கு இஸ்லாமியர்களுக்கு புதிய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பாஜக, பஜ்ரங்தன் தள் மற்றும் விஷ்வ இந்து பரிசத் உள்ளிட்ட அமைப்புகள் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கடைகளை நிர்வாகம் செய்வதற்கான ஏலத்தில் பஜ்ரங்தன் தள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் ஏலத்தைக் கைப்பற்றியுள்ளார். அவரிடமிருந்து குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி கடைகளை அமைத்துக் கொள்ள முயன்ற இஸ்லாமியர்கள் உள்ளிட்ட வேற்று மதத்தினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்துக்கள் அல்லாத வேற்று மதத்தினர்கள் கடைகளை அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் மதத்தைக் காரணம் காட்டி தங்களது வியாபாரத்தை குலைப்பதாக பலரும் குற்றம்சாட்டியுள்ளனர். 

கர்நாடகத்தின் முல்கி பகுதியில், “பாப்பநாடு ஸ்ரீ துர்காபரமேஸ்வரி தேவி ஜாத்ராவில், நாட்டின் சட்டத்தை மதிக்காதவர்களுடனும், நாங்கள் வணங்கும் மாடுகளைக் கொல்பவர்களுடனும், இந்த நாட்டின் ஒற்றுமையை கேள்விக்குள்ளாக்குபவர்களுடனும் சேர்ந்து வியாபாரம் செய்ய மாட்டோம்” எனக் குறிப்பிட்டு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இதுதொடர்பாக கடைகளை அமைப்பது தொடர்பாக ஏலம் எடுத்தவர் மேற்கொள்ளும் முடிவுகளுக்கு மத்தியில் தாங்கள் தலையிடுவதில்லை என திருவிழா மற்றும் கோயில் நிர்வாகத்தினர் விளக்கமளித்துள்ளனர்.

இதுகுறித்து தனது சுட்டுரைப் பதிவில் கருத்து பதிவிட்டுள்ள கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, “சில இந்து அமைப்புகள் இஸ்லாமிய வியாபாரிகள் கடைகளை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று அழுத்தம் கொடுத்து வருவது கவலையளிக்கும் விஷயம். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு மெளனமாக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய சர்ச்சை எழுந்துள்ளது அம்மாநிலத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com