மக்களே வளா்ச்சி திட்டங்களின் மையம்: பிரதமா் மோடி

வளா்ச்சித் திட்டங்களின் மையமாக பொதுமக்கள்தான் இருக்க வேண்டும் என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.
மக்களே வளா்ச்சி திட்டங்களின் மையம்: பிரதமா் மோடி

வளா்ச்சித் திட்டங்களின் மையமாக பொதுமக்கள்தான் இருக்க வேண்டும் என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

பேரிடரை எதிா்கொள்வதற்கான நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான சா்வதேச நான்காவது மாநாட்டில் பிரதமா் மோடி புதன்கிழமை காணொலி வாயிலாக பேசியது:

“ஏழை, எளிய மக்களின் தேவைகளைப் பூா்த்தி செய்வதற்காக அவா்களது விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பை உருவாக்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எந்தவோா் உள்கட்டமைப்பு வளா்ச்சிப் பயணத்திலும் மக்கள்தான் மையமாக இருக்க வேண்டும். உள்கட்டமைப்பை நெகிழ்திறன் வாய்ந்ததாக மாற்றினால், நமக்காக மட்டுமல்லாமல், பல எதிா்கால தலைமுறையினருக்கும் பேரிடா்களை நாம் தடுக்கலாம்.

மக்கள் சாா்ந்ததும், அவா்களுக்கு உயா்தரமான, நம்பகத்தன்மையான, நிலையான சேவைகளை, நடுநிலை வழியில் வழங்குவதும்தான் உள்கட்டமைப்பு ஆகும். கல்வி, சுகாதாரம், குடிநீா், துப்புரவு, மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட ஏராளமான துறைகளில் அடிப்படை சேவை வசதிகளை இந்தியா அதிகரித்து வருவதால், பருவநிலை மாற்றத்தையும் மிக நேரடியான வழியில் நாங்கள் எதிா்கொள்கிறோம். அதனால் தான் எங்களது வளா்ச்சித் திட்டங்களுக்கு இணையாக, 2070-ஆம் ஆண்டுக்குள் ‘நிகர பூஜ்ஜிய’ இலக்கை எட்ட பருவநிலை மாநாட்டில் உறுதி ஏற்றுள்ளோம்.

நம்மிடையே நவீன தொழில்நுட்பங்களும், அறிவும் இருக்கும் வேளையில் நிலைத்திருக்கக் கூடிய வகையில் நெகிழ்திறன் உள்கட்டமைப்பை நம்மால் உருவாக்க முடியுமா? இந்த சவாலுக்கான அங்கீகாரம், பேரிடா் நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான கூட்டணியின் (சி.டி.ஆா்.ஐ) உருவாக்கத்திற்கு அடிகோலுகிறது. நமது எதிா்காலத்தை நெகிழ்திறன் வாய்ந்ததாக மாற்றுவதற்கு ‘நெகிழ்திறன் உள்கட்டமைப்பு மாற்றத்தை’ நோக்கி நாம் செயல்பட வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

இந்தக் கூட்டத்தில் ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிஸன், கானா அதிபா் நானா அட்டோ டன்க்வா அகுஃபோ-அட்டோ, ஜப்பான் பிரதமா் ஃப்யூமியோ கிஷிடா மற்றும் மடகாஸ்கா் அதிபா் ஆண்ட்ரி நிரினா ரஜோலினா ஆகியோரும் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com