குஜராத்தில் 6 முறை விட்டதைப் பிடிக்குமா, காங்கிரஸ்?

குஜராத்தில் 6 முறை விட்டதைப் பிடிக்குமா, காங்கிரஸ்?

குஜராத்தில் மீண்டும் தனது செல்வாக்கைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்குத் தயாராகி வருகிறது காங்கிரஸ்.

குஜராத்தில் மீண்டும் தனது செல்வாக்கைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்குத் தயாராகி வருகிறது காங்கிரஸ்.

காங்கிரஸ் ஒருகாலத்தில் குஜராத் மாநிலத்தில் அசைக்க முடியாத கட்சியாக இருந்தது. ஆனால், கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் குஜராத் மாநிலத்தில் பாஜக தனது செல்வாக்கை நிலைநாட்டி வைத்திருக்கிறது. 1995 முதல் குஜராத் மாநிலத்தில் ஆறு முறை பாஜக ஆட்சி அமைத்துள்ளது.

மாறிவரும் தற்போதைய சூழ்நிலையில், குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதிகளைத் தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளது எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலத்தில் ஆளும் பாஜகவை எதிர்த்து காங்கிரஸ் கடுமையாக போராடியது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் காங்கிரஸ் 77 தொகுதிகளைக் கைப்பற்றியது. அந்தத் தேர்தலில் பாஜக 99 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.

தற்போது ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில்  காங்கிரஸ் உள்ளது. இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றிக் கட்சியைப் பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில்  காங்கிரஸ் உள்ளது.

காங்கிரஸின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஹிமாசலப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் மிகுந்த சவாலானதாக பார்க்கப்படுகிறது. அவர் இந்த இரு மாநிலத் தேர்தலிலும் காங்கிரஸின் வெற்றிக்கு எந்த மாதிரியான முடிவுகள் மற்றும் வியூகங்களை வகுக்கப் போகிறார் என்பது மிகவும் முக்கியம். 24 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸின் தலைவராகத் தேர்வாகியுள்ளார். தேர்வான குறைந்த காலத்திலேயே இரு மாநிலத் தேர்தல் வருவது அவரது தலைமைக்கான பரிசோதனையாகப் பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ளபடியே காங்கிரஸ் என்ன நிலையில் இருக்கிறது?

பலம் 

காங்கிரஸிற்கு பல ஆண்டுகளாக இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினைச் சேர்ந்த தாக்குர் மற்றும் கோலி வகுப்பினர்களின் ஆதரவு இருப்பது சாதகமாக பார்க்கப்படுகிறது. பட்டியலினம், பழங்குடியினர் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்குகள் காங்கிரஸுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆறு முறை பாஜகவிடம் தோல்வியடைந்தபோதிலும் மாநிலத்தில் இப்போதும் 40 சதவிகித வாக்குகளை காங்கிரஸ் பெற்றுள்ளது.

இஸ்லாமியர்கள், ஆதிவாசிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளை ப் பெற காங்கிரஸ் முயற்சி செய்தால் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதேபோல ஆளும் அரசின் மீது அதிருப்தியில் இருக்கும் படேல் சமூகத்தினரின் ஆதரவை ப் பெறவும் காங்கிரஸ் முயற்சி செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.
 

பலவீனம்

மாநில அளவில் காங்கிரஸில் மிகப் பெரிய தலைவர்கள் இல்லாதது,

காங்கிரஸ் கட்சியில் நிலவும் பிரிவினை மனப்பான்மை மற்றும் தலைவர்களிடத்தில் ஒற்றுமையின்மை,

குஜராத்தில் உள்ள 66 நகரசபை தொகுதிகளில் கடந்த 30 ஆண்டுகளாக காங்கிரஸ் வெற்றி பெறாதது,

காங்கிரஸ் தலைமை, தேர்தலில் கவனம் செலுத்தாமல் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தில் கவனம் செலுத்துவதால் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் பணிகளைப் பார்ப்பதற்குத் தனித்து விடப்பட்டது போல தெரிவது,

கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸின் பல முக்கிய தலைவர்களும் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து கட்சியை பலவீனப்படுத்தியுள்ளது - எல்லாமும் வெளிப்படையாகத் தெரியும் காங்கிரஸின் பலவீனங்கள்.

வாய்ப்புகள்

கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து கொண்டே வருகிறது.

குஜராத் மாநிலத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி இறங்கியுள்ளது. இதனால், நகர்ப்புறங்களில் உள்ளவர்களின் வாக்குகளில் கணிசமான வாக்குகள் பாஜகவிற்கு குறையும். கிராமப்புறங்களில் காங்கிரஸிற்கு வாக்கு வங்கி உள்ளது,  அதன் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கக் கூடும்.

காங்கிரஸ் தலைவர்கள் கிராமப்புற மக்களின் வாக்குகளைப் பெரிதும் நம்பியுள்ளனர். அதற்கான களப் பணிகளிலும் ஈடுபட்டு உள்ளனர். அதன் காரணத்தினாலேயே பிரதமர் நரேந்திர மோடி பாஜக நிர்வாகிகளை, காங்கிரஸ் அமைதியாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாக எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆபத்துகள்

பிரதமர் நரேந்திர மோடிக்கு குஜராத் மாநிலத்தில் இருக்கும் ஆதரவு காங்கிரஸின் வெற்றி வாய்ப்பைப் பறிக்கக் கூடும்.

ஆம் ஆத்மி தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் காங்கிரஸிற்கு கிடைக்கும் வாக்குகள் சிதறக்கூடும்.

குஜராத் தேர்தலில் தோல்வியடைந்து ஆட்சியமைக்க இயலாமல் போய்விட்டால் காங்கிரஸில் இருந்து மேலும் பல தலைவர்கள் விலகும் அபாயம் உள்ளது.

குஜராத்தில் ஏற்கெனவே தேர்தலுக்கான வேலைகளை அனைத்துக் கட்சிகளுமே தொடங்கிவிட்டன. இப்போது அறிவிப்பும் வந்துவிட்ட நிலையில் எல்லாமும் தீவிரமடையும்.

மோர்பி தொங்கு பால விபத்தில் 141 பேர் உயிரிழக்க நேரிட்ட விஷயத்தில் மிக நாகரிகமாக ராகுல் காந்தி கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டாலும், ஆளும் பா.ஜ.க.வுக்குப் பெரும் பின்னடைவையே தரும், அதுவே காங்கிரஸின் பலமாகவும் மாறும் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதே குஜராத் மாடல் நிர்வாகத்துக்கு எடுத்துக்காட்டுதான் இந்த விபத்து என்று எதிர்க்கட்சிகள் பிரசாரத்தைத் தொடங்கி, பாஜகவை முடக்க முயலுகின்றன.

இனிவரும் நாள்களில் மேலும் நிலைமை தெளிவுபடலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com