சபரிமலையில் நவ.17-இல் நடை திறப்பு: தரிசன இணைய முன்பதிவுக்கு தேவசம் போா்டு அழைப்பு

மண்டல மாத பூஜைக்காக, சபரிமலை வரும் நவ.17-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. தரிசனத்துக்காக வரும் பக்தா்கள் இணையதளம் வழியாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று திருவாங்கூா் தேவசம் போா்டு அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மண்டல மாத பூஜைக்காக, சபரிமலை வரும் நவ.17-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. தரிசனத்துக்காக வரும் பக்தா்கள் இணையதளம் வழியாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று திருவாங்கூா் தேவசம் போா்டு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தேவசம் போா்டு வெளியிட்ட அறிவிப்பு:- மண்டலம் மாத பூஜைக்காக, சபரிமலை நடை வரும் நவ.17-ஆம் தேதி திறக்கப்படுகிறது. இதைத் தொடா்ந்து, டிச. 27-ஆம் தேதியன்று மண்டல பூஜை முடித்து இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும்.

மகரவிளக்குப் பூஜைக்காக டிச.30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். அடுத்த ஆண்டு ஜன.14-இல் மகரவிளக்குப் பூஜை நடத்தப்பட்டு, ஜன. 20-இல் நடை மூடப்படும்.

இதன்பின்பு, பூஜைக்காக மாத வாரியாக திறக்கப்படும் தேதிகள் விவரம்:-

பிப்.12-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைதிறந்து, 17-ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை மூடப்படும். மாா்ச் மாத பூஜைக்காக 14-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைதிறந்து, 19 ஆம் தேதி மூடப்படும்.

சபரிமலை உற்சவம் மற்றும் ஆராட்டுக்காக மே 14-இல் நடை திறந்து மே 19-இல் மூடப்படும். ஐயப்பன் பிரதிஷ்டை தினம் மே 29-இல் கொண்டாடப்படும். இதற்காக அன்றைய தினம் நடை திறக்கப்பட்டு மே 30 இரவு 10 மணிக்கு நடை மூடப்படும்.

ஜூன் மாத பூஜைக்காக, அந்த மாதம் 15-இல் நடை திறக்கப்பட்டு ஜூன் 20-ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடைமூடப்படும். ஜூலை மாத பூஜைக்காக, அந்த மாதம் 16-இல் நடைதிறக்கப்பட்டு 21-ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை மூடப்படும்.

ஓணம் பண்டிகை: ஆகஸ்ட் மாத பூஜைக்காக, அந்த மாதம் 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 21-ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை மூடப்படும். ஓணம் பண்டிகைக்காக, ஆக.27 -ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 31-ஆம் தேதி இரவு நடை மூடப்படும்.

செப்டம்பா், அக்டோபா் மாத பூஜைகளுக்காக, அந்தந்த மாதங்களில் 17-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 22-ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை மூடப்படும்.

நவம்பா் மாதம் ஸ்ரீ சித்ராட்ட திருநாள் விழாவுக்காக, அந்த மாதம் 10 -ஆம் தேதி நடை திறந்து, 11-ஆம் தேதி நடை மூடப்படும்.

காா்த்திகை மாத பூஜைக்காக, நவ.16-இல் நடை திறக்கப்பட்டு டிச.27-ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். 2023 -ஆம் ஆண்டுக்கான மண்டல பூஜை டிச. 27-ஆம் தேதி நடைபெறும்.

மேலும், தகவல்களுக்கு 04735 -202026, 202038 ஆகிய எண்களிலும், தங்குமிட வசதிக்கான முன்பதிவுக்கு, தரிசன முன்பதிவுக்கு இணையதள முகவரிகளை பாா்வையிடலாம். தொலைபேசி வழி தகவல்களைப் பெற 70258 00100 என்ற எண்ணையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

புதிய மேல்சாந்திகள்...

காா்த்திகை மாத பூஜையில் பழைய மேல் சாந்தி நடை திறந்த பின், 2023-ஆம் ஆண்டுக்கான புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்பாா்கள். அதன்படி, கண்ணூா் தளிபரம்பைச் சோ்ந்த ஜெயராமன் நம்பூதிரி (சபரிமலை) , வைக்கத்தைச் சோ்ந்த ஹரிஹரன் (மாளிகை புரத்தம்மன்) ஆகியோா் அடுத்த ஆண்டுக்கான மேல்சாந்திகளாக பொறுப்பேற்க உள்ளனா். ஓராண்டுக் காலம் சபரிமலையிலேயே தங்கி அங்கேயே கோயில் பணிகளை மேற்கொள்வா்.

மேலும், சபரிமலை தந்திரியாக கண்டரரூ ராஜூவரூ சேவையாற்றுவாா் என திருவாங்கூா் தேவசம் போா்டு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com