உடற்பயிற்சியின்போது மரணம் நேரிடாமல் தவிர்ப்பது எப்படி?

புனித் ராஜ்குமாரைத் தொடர்ந்து இப்போது ஹிந்தி டி.வி. நடிகர் சித்தாந்த் வீர்... உடற்பயிற்சியின்போது மரணம் நேரிடாமல் தவிர்ப்பது எப்படி?
உடற்பயிற்சியின்போது மாரடைப்பால் மரணம் நேர்வது ஏன்?
உடற்பயிற்சியின்போது மாரடைப்பால் மரணம் நேர்வது ஏன்?


உடற்பயிற்சியின்போது மாரடைப்பு ஏற்பட்டு, ஹிந்தி தொலைக்காட்சித் தொடர் நடிகர் சித்தாந்த் வீர் சூரியவன்ஷி (46) உயிரிழந்தது அவருடைய ரசிகர்களை மட்டுமின்றிப் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மும்பையில்  உடற்பயிற்சிக் கூடத்தில்,  தீவிரமாக உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, அவரது உடல்நிலை  சீர்குலைந்து சரிந்துவிழுந்துள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துவிட்டனர்.

இந்த சம்பவம் கடுமையான அதிர்வலையை ஏற்படுத்தக் காரணம், ஏற்கெனவே  நேரிட்ட மேலும் சில மரணங்கள்தான். கடந்த செப்டம்பரில் நகைச்சுவை நடிகர் ஸ்ரீவத்சவா (58), உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு தில்லி எய்ம்ஸ்  மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். கன்னட நடிகர்  புனித் ராஜ்குமார் (46), உடற்பயிற்சிக் கூடத்தில் நேரிட்ட மாரடைப்பால் இறந்து, தனது லட்சக்கணக்கான ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியதும்தான்.

தங்களது உடற்கட்டில் மிகவும் கவனம் செலுத்தி வருபவர்களும், தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொண்டு உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விழைபவர்களும், இவ்வாறு உடற்பயிற்சிக் கூடத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைவது, இதுபோன்று பணி அல்லது சொந்த விருப்பத்தின் பேரில் தொடர்ந்து கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்பவர்களிடையே  அச்சத்தையும் ஆயிரம் கேள்விகளையும் எழுப்புகின்றன.

இத்தகைய எதிர்பாராத மரணங்களைத் தவிர்க்கவே முடியாதா? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

இது குறித்து மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்: 

உடற்பயிற்சிக் கூடத்துக்குத் தொடர்ந்து சென்று, கடுமையான  உடற்பயிற்சிகளைச் செய்வது மட்டும், ஒருவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்பதற்கு அடையாளம் அல்ல.

ஒருவர் 40 மற்றும் 50 வயதுகளைத் தொடும்போது, அதை எளிதாக எடுத்துக் கொள்ளாமல், தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைகளை செய்துகொள்வது அவசியம் என்றும், நெஞ்சுப் பகுதி கனப்பது, லேசான மயக்கம் அல்லது தலைசுற்றல், தாடையில் வலி போன்ற அறிகுறிகளைக் கட்டாயமாக கவனிக்க  வேண்டும், புறந்தள்ளக் கூடாது என்றும் டாக்டர்கள் வலியுறுத்துகிறார்கள்.

தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவராக இருந்தாலும், புதிதாக உடற்பயிற்சிக்  கூடத்துக்குச் செல்பவராக இருந்தாலும், கடுமையான உடற்பயிற்சிகளைத் தொடங்குவதற்கு முன்பு, கட்டாயம் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.  அல்லது சிறப்பு மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். அவர்களின் வழிகாட்டுதல்படி, ஒருவர் தனது மன அழுத்த அளவு, தங்களது உடலின் தாங்கும் திறன் உள்ளிட்டவற்றையும் கண்டறிந்துகொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

யாருடன் உங்கள் போட்டி?

ஒருவர் உடற்பயிற்சிக் கூடத்துக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தால், அவர் அங்கு பயிற்சியளிக்கும் பயிற்சியாளரையோ அல்லது அவருக்குப் பிடித்த நடிகர், பிரபலமானவரையோ தனது போட்டியாளராக நினைத்துக் கொண்டு பயிற்சி செய்யக் கூடாது.

குறிப்பிட்ட நபரைப் போல ஆக வேண்டும் என்று ஆசைப்படக் கூடாது. மாறாக, தன்னுடன் மட்டுமேதான் போட்டியிட வேண்டும். எனவே, உடற்பயிற்சிக்  கூடத்துக்குச் செல்வதைக் கடினமானதாக மாற்றாமல், எளிதானதாக மாற்றுங்கள்.

உடற்பயிற்சிக் கூடம் முழுமையாக காற்று வசதி இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்துக் குறையாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல, கடினமான உடற்பயிற்சிகளை  மேற்கொண்டுவிட்டு, மது வகைகள் குடிப்பதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இது போன்றவற்றைக் கவனத்தில் கொண்டால், உயற்பயிற்சிக் கால மாரடைப்புகளை நிச்சயம் தடுக்கலாம் என்கிறார்கள் டாக்டர்கள்.

நினைவில் கொள்க..
உடற்பயிற்சி உடலுக்கு நல்லது. ஆனால், அதீத உடற்பயிற்சி பாதிப்பைத் தரலாம். 

ஒரு வாரத்தில் 300 நிமிடத்துக்கும் மேல் கடினமான உடற்பயிற்சிகள் செய்வது உடல்நிலையை பாதிக்கலாம்.

இதய நோய் அல்லது மாரடைப்புக்கான அறிகுறிகளை புறந்தள்ள வேண்டாம். இவை சில நேரங்களில் தாங்கிக்கொள்ள முடியாததாக இருக்கும்.

கடினமான உடற்பயிற்சிகளுடன், புகைப்பிடித்தல், புகையிலைப் பழக்கம், போதைப் பழக்கம் போன்றவை மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கின்றன.

40 மற்றும் 50 வயதைத் தொடும்போது, கண்ணுக்குத் தெரியாத எதிரிகளான நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, அதிகக் கொழுப்பு ஆகியவற்றை கண்காணிக்கத் தொடங்க வேண்டும்.

ஆரோக்கியமாக இருந்தாலும் கூட, வேலை, குடும்பம், போட்டி, திறன் ஆகியவற்றால் ஏற்படும் மன அழுத்தம் உடல்நிலையை பாதித்து, மாரடைப்புக்கு இட்டுச்செல்கிறது.

இதையெல்லாம் தாண்டி, கரோனா வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, குணமடைந்தவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் 60 சதவீதம் அதிகம் என்றும், திடீர் மாரடைப்பு நேரிட்டு மரணமடையும் அபாயம் 2.5 முறை அதிகம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

நடைப்பயிற்சி எந்திரத்தில் பயிற்சிசெய்யும்போது


நடைப்பயிற்சி செய்யும் எந்திரத்தில் (டிரெட்மில்) பயிற்சி செய்யும் போது ஒரு சில அம்சங்களை கவனிக்க வேண்டும். அதாவது, எளிமையான உடற்பயிற்சிகளுக்கு இடையே, திடீரென கடுமையான பயிற்சிகளை செய்வது மாரடைப்புக்கு வழிகோலும். ஏற்கனவே இதயம் தொடர்பான பிரச்னை இருப்பவர்களுக்கு இந்த அபாயம் அதிகம். தங்களது திறன் எல்லையைத் தாண்டிலும் சிலர் உடற்பயிற்சி மேற்கொள்வார்கள். இவர்களில் சிலருக்கு ஏற்கனவே இதயம் தொடர்பான பிரச்னைகள் இருந்து அதனை கவனிக்காமலோ, இதுவரை கண்டறியாமலோ இருக்கக் கூடும். இதுவும், மன அழுத்த அளவு, புகைப்பழக்கம், மோசமான உணவுப் பழக்கம், நீரிழிவு போன்றவைகளும் இணைந்து கொண்டு அபாயத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகின்றன.  அதுதான் மாரடைப்பு.

பொதுவாக மிதமான உடற்பயிற்சி இதயத்துக்கு நல்லதுதான். ஆனால் தமனியில் அடைப்பு இருப்பது கண்டறியப்படாமலோ, ரத்தத்தை வெளியேற்றும் இடத்தில் இருக்கும் தடைகள் தெரியவராமலோ, ரத்த நாளங்களில் இருக்கும் சிக்கல்கள் கண்டுபிடிக்காமல் இருக்கும் போது, இளம் தலைமுறையினர், மாரடைப்புக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே, இளம் தலைமுறையினரும் நெஞ்சு கனப்பது போன்ற வலி, லேசான தலைச்சுற்றல், தாடைகளில் வலி, முதுகு அல்லது தோள்பட்டைகளில் வலி போன்றவை இதய பிரச்னைகளின் மிக முக்கிய அறிகுறிகள், இவற்றை யாருமே நிராகரிக்காமல், உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு தங்களை உள்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்ல, டிரெட்மில்லில் பயிற்சி செய்யும் போது இதயத் துடிப்பைக் கண்காணிக்க வேண்டும். அப்போது, உங்கள் அதிகபட்ச இதயத் துடிப்பில் 70 சதவீதத்தை தாண்டக் கூடாது என்பதை நினைவில்கொள்க. வழக்கமாக, இதய துடிப்பானது ஒரு நிமிடத்துக்கு 140 என்ற அளவில் இருப்பது நல்லது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com