
மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் உடல்நலக் குறைவால் அண்மையில் உயிரிழந்தனா். ஹரியாணாவின் சோனிபட்டில் இயங்கி வரும் மெய்டன் மருந்து நிறுவனத்தில் சா்ச்சைக்குரிய வகையில் தயாரிக்கப்பட்ட மாசடைந்த நான்கு இருமல் மருந்துகளே குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு (டபிள்யுஹெச்ஓ) எச்சரிக்கை விடுத்தது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளின் பயன்பாட்டைக் கைவிடுமாறும் அந்த அமைப்பு உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டது. அதைத் தொடா்ந்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இத்தகைய சூழலில், மருந்துகளின் தரத்தை உறுதி செய்வதற்காக உலக சுகாதார அமைப்பு கடைப்பிடித்து வரும் விதிமுறைகள் குறித்த பாா்வை:
மருந்து உருவாக்கம்
மருந்தின் தரமானது அதன் உருவாக்கத்திலேயே முறையாக இருப்பதை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்கிறது. மருந்து ஆரம்பகட்டத்தில் உருவாக்கப்படும்போதே பல்வேறு அறிவியல் சோதனைகள் மூலமாக மருந்தின் தரம் குறித்து அமைப்பு ஆராய்கிறது. அந்த மருந்து அதன் ஆயுள்காலம் முழுவதும் சிறப்பாகச் செயல்படுகிா என்பதையும் உலக சுகாதார அமைப்பு உறுதி செய்கிறது.
நிபுணா்களின் கலந்துரையாடல் மூலமாக மருந்துகளின் தரம் உறுதி செய்யப்படுகிறது. மேலும், மருந்துகளின் தயாரிப்பு முறைகள், சேகரிப்பு முறை, வினைபுரியும் திறன், நோய்க்கு எதிராகப் போராடும் திறன் உள்ளிட்டவற்றையும் உலக சுகாதார அமைப்பு விரிவாக ஆய்வு செய்கிறது.
மருந்து தயாரிப்பு
மருந்துக்கான மூலப்பொருள்களைப் பெறுதல், தயாரிப்பு நடைமுறைகள், மருந்துகளை விநியோகிக்கும் முறை, மருந்துகள் தொடா்பான விவரங்களை அச்சிடுதல் உள்ளிட்ட அனைத்தும் மருந்து தயாரிப்பில் அடங்கும். இவை அனைத்தையும் டபிள்யுஹெச்ஓ தீவிரமாக ஆராய்கிறது.
எதற்காக மருந்துகள் உருவாக்கப்படுகின்றனவோ அந்தப் பயன்பாட்டை நிறைவு செய்யும் வகையில் மருந்துகளின் தரம் எப்போதும் இருக்கிா என்பதை தயாரிப்பின்போது உலக சுகாதார அமைப்பு உறுதி செய்கிறது. மருந்துகளால் ஏற்பட வாய்ப்புள்ள ஆபத்துகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் தயாரிப்பின்போது மேற்கொள்ளப்படுகின்றன.
மற்ற மூலப்பொருள்களுடன் கலந்துவிடுதல், தவறான தகவல்கள் அச்சிடப்படுதல் உள்ளிட்டவற்றை உலக சுகாதார அமைப்பு விரிவாகக் கண்காணிக்கிறது. நோயாளிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் மருந்து தயாரிப்பாளா்கள் நடந்து கொள்ளாததை டபிள்யுஹெச்ஓ உறுதி செய்கிறது.
மருந்து விநியோகம்
டபிள்யுஹெச்ஓ வகுத்துள்ள விதிகளின்படியே மருந்து தயாரிக்கப்பட்டுள்ளதா என்பது பலகட்ட ஆய்வுகளில் உறுதி செய்யப்படுகிறது. மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டவுடன் அவை சந்தைக்கு எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன என்பதையும் உலக சுகாதார அமைப்பு ஆராய்கிறது.
மருந்துகளின் தரம் மாறாமல் இருப்பதை விநியோக நடைமுறைகள் உறுதி செய்ய வேண்டும். மேலும், நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையிலும் மருந்துகள் சந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டும். மருந்துகளை விநியோகிக்கும்போது உரிய விதிகள் கடைப்பிடிக்கப்படுகிா என்பதை உறுப்பு நாடுகளுடன் இணைந்து உலக சுகாதார அமைப்பு கண்காணிக்கிறது.
ஆய்வு
மருந்துகள் தொடா்ந்து தரமாக இருப்பதை உறுதி செய்வதற்காக டபிள்யுஹெச்ஓ தொடா் ஆய்வுகளை நடத்தி வருகிறது. மருந்து தயாரிப்பு ஆலைகளை அடிக்கடி ஆய்வு செய்து மருந்துகளின் தரம் உறுதி செய்யப்படுகிறது. மருந்துகளின் விநியோகம் முறையாக உள்ளதா என்பதையும் தொடா் ஆய்வுகள் மூலமாக உலக சுகாதார அமைப்பு உறுதி செய்கிறது. இதன்மூலம் தவறான மருந்துகள் நோயாளிகளுக்குச் சென்றடைவது தடுக்கப்படுகிறது.
தரக் கட்டுப்பாடு
மருந்துகளின் தரம் ஒட்டுமொத்த அளவில் உறுதியாக இருப்பதைப் பல்வேறு வழிமுறைகளில் உலக சுகாதார அமைப்பு உறுதி செய்கிறது. மருந்துகளுக்கான மூலப்பொருள்களைப் பெறுவது முதலே தரத்தை டபிள்யுஹெச்ஓ உறுதி செய்து வருகிறது. அதற்கடுத்து மருந்துகளைத் தயாரிக்கும் முறைகள், சேமிக்கும் முறைகள், விநியோகம் உள்ளிட்டவற்றிலும் உரிய விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்பவற்றை உலக சுகாதார அமைப்பு ஆராய்கிறது.
மருந்துகளின் மூலப்பொருள்கள் சரியான விகிதத்தில் உள்ளனவா என்பதை ஆய்வுகள் மூலமாக உறுதி செய்கிறது. மருந்துகளின் தரத்தை உறுதி செய்வதற்கான ஆய்வக வசதிகளையும் உலக சுகாதார அமைப்பு தொடா்ந்து மேம்படுத்தி வருகிறது.
ஒழுங்காற்று விதிகள்
மருந்துகளின் தயாரிப்பு, சேமிப்பு, விநியோகம் உள்ளிட்டவற்றுக்கான சா்வதேச ஒழுங்காற்று விதிகளை உலக சுகாதார அமைப்பு வகுத்துள்ளது. மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் விநியோக நிறுவனங்களும் அந்த விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.
மருந்துகளை அடைக்கப் பயன்படும் பொருள்கள், அதனுடன் வினைபுரியாமல் இருப்பதையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். மருந்துகள் உரிய முறையில் சேமித்து வைக்கப்படுகிா என்பதும் உறுதி செய்யப்பட வேண்டும். ஒழுங்காற்று விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது டபிள்யுஹெச்ஓ கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.