பிளாஸ்மாவுக்கு பதிலாக பழச்சாறு ஏற்றிய மருத்துவமனை தரைமட்டமாகிறது

ரத்த தட்டுகளுக்குப் பதிலாக பழச்சாறை உடலில் செலுத்தியதாக தனியார் மருத்துவமனை மீது எழுந்த குற்றச்சாட்டில், அந்த மருத்துவமனைக் கட்டடம் இடித்துத் தரைமட்டமாக்கப்படவிருக்கிறது.
பிளாஸ்மாவுக்கு பதிலாக பழச்சாறு ஏற்றிய மருத்துவமனை தரைமட்டமாகிறது
பிளாஸ்மாவுக்கு பதிலாக பழச்சாறு ஏற்றிய மருத்துவமனை தரைமட்டமாகிறது

உத்தர பிரதேசத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ரத்த தட்டுகளுக்குப் பதிலாக பழச்சாறை உடலில் செலுத்தியதாக தனியார் மருத்துவமனை மீது எழுந்த குற்றச்சாட்டில், அந்த மருத்துவமனைக் கட்டடம் இடித்துத் தரைமட்டமாக்கப்படவிருக்கிறது.

அக்டோபர் 28ஆம் தேதிக்குள் அந்த தனியார் மருத்துவமனை இயங்கி வந்த கட்டடத்தை, மருத்துவ நிர்வாகம் காலி செய்துவிட வேண்டும் என்று பிரயாக்ராஜ் மேம்பாட்டுக் கழக அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

அந்த மருத்துவமனைக் கட்டடம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே, அந்தக் கட்டடம் விரைவில் தரைமட்டமாக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

பிரயாக்ராஜ் நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பிரதீப் பாண்டே என்பவா் டெங்கு பாதிப்பால் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு ரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறைந்ததையடுத்து, வெளியில் இருந்து ரத்த தட்டுகள் வாங்கப்பட்டு உடலில் ஏற்றப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. ஆனால், ரத்த தட்டுகளைச் செலுத்தாமல் சாத்துக்குடி பழச்சாறை நோயாளியின் உடலில் மருத்துவமனை நிா்வாகம் செலுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அதையடுத்து, அந்த நோயாளி வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். ஆனால், சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். நோயாளியின் உடலில் பழச்சாறு செலுத்தியதாக காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இதைக் கவனத்தில் கொண்ட மாநில துணை முதல்வா் பிரஜேஷ் பாடக், சம்பந்தப்பட்ட தனியாா் மருத்துவனைக்கு ‘சீல்’ வைக்குமாறு உத்தரவிட்டாா். அதையடுத்து மருத்துவமனை பூட்டப்பட்டது. அந்த மருத்துவமனை மீதான குற்றச்சாட்டு உறுதியாகும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அனைவா் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வா் பாடக் உறுதி அளித்துள்ளாா்.

நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் ரத்த தட்டுகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா். இந்தச் சம்பவம் குறித்து தனியாா் மருத்துவமனை உரிமையாளா் சௌரப் மிஸ்ரா கூறுகையில், ‘‘ரத்த தட்டுகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு நோயாளியின் உறவினா்களை வலியுறுத்தினோம். அவா்கள் எஸ்ஆா்என் மருத்துவமனையில் இருந்து 5 யூனிட் தட்டுகளை வாங்கி வந்தனா்.

அதில் 3 யூனிட்டை நோயாளிக்குச் செலுத்தியபோதே அவரது உடல்நிலை மேலும் மோசமடையத் தொடங்கியது. இந்த விவகாரத்தில் ரத்த தட்டுகளை வழங்கிய எஸ்ஆா்என் மருத்துவமனை மீதே உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என்றாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com