
கோப்புப் படம்
தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் இளம் பெண் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல் துறை தரப்பில் கூறியதாவது: “இறந்த அந்த பெண் பார்வதி பாய் (24 வயது). அவர் மத்தியப் பிரதேசத்தின் ரய்சன் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் 8 மாதக் குழந்தை ஒன்றும் உள்ளது. நேற்று (ஆகஸ்ட் 31) மாலை அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் நடந்த அன்று இரவு பார்வதியின் கணவர் ராம்கிருஷ்ணா லோதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, காவல் துறை அந்த மூன்று பேரின் உடல்களையும் கிணற்றிலிருந்து மீட்டனர். இறந்த பெண் மற்றும் அவரது கணவர் ராம்கிருஷ்ணா என இருவரும் கணவர் ராம்கிருஷ்ணாவின் பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்களிடத்தில் இருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர். காவல் துறை இந்த தற்கொலை குறித்து அனைத்துக் கோணங்களிலும் விசாரித்து வருகிறது.” என்றனர்.
இதையும் படிக்க: வெளியானது சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' பட பிம்பிலிக்கி பிலாப்பி பாடல்
பார்வதியின் கணவர் ராம்கிருஷ்ணா, எனக்கும் என்னுடைய மனைவிக்கும் இடையே எந்த ஒரு பிரச்னையும் கிடையாது. அப்படி இருக்கையில் இப்படி ஒரு துயரமான முடிவை அவர் ஏன் எடுத்தார் என எனக்குப் புரியவில்லை எனக் காவல் துறையிடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.