
இந்திய ஒற்றுமைப் பயணத்தின் மூன்றாவது நாள் பயணத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாகர்கோவிலில் இன்று தொடங்கினார்.
காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை (பாரத் ஜோடோ யாத்) புதன்கிழமை மாலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் இதனை தொடங்கி வைத்தார்.
ராகுல் காந்தியுடன் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோர் நடைப் பயணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் மூன்றாம் நாளான இன்று நாகர்கோவிலில் தனது பயணத்தைத் தொடங்கினார். நாகர்கோவிலில் இருந்து தக்கலை முளகுமூடு பகுதியை நோக்கி 18 கிலோமீட்டர் பயணம் மேற்கொள்கிறார். இன்று பிற்பகல் 1 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார்.
கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீா் வரை 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,600 கி.மீட்டரை 148 நாள்கள் காங்கிரஸ் குழுவினர் பயணம் செய்கின்றனர்.
தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை நடைப்பயணம். பிறகு மதிய உணவு இடைவேளை. பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைப்பயணம். இரவு ஓய்வு எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செப். 10 வரை மொத்தம் 56 கி.மீ., கேரளத்தில் 17 நாள்கள், கா்நாடகத்தில் 21 நாள்கள், தெலங்கானாவில் 13 நாள்கள், ஆந்திரத்தில் 3 நாள்கள் என தென்மாநிலங்களில் பயணம் மேற்கொள்கின்றனர்.
இதையும் படிக்க | பிரிட்டன் அரசி எலிசபெத் (96) மறைந்தாா்