வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

தமிழில் எஸ்எஸ்சி தேர்வு: மத்திய அரசு அனுமதி

மத்திய அலுவலர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) நடத்தும் கடைநிலை ஊழியர்கள் உள்ளிட்ட பலவகை பணியாளர் தேர்வு (எஸ்எஸ்சி - எம்டிஎஸ்), ஒருங்கிணைந்த மேல்நிலைப் பணியாளர் தேர்வு

News image
Updated On :18 ஏப்ரல் 2023, 11:00 pm

 நமது நிருபர்

மத்திய அலுவலர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) நடத்தும் கடைநிலை ஊழியர்கள் உள்ளிட்ட பலவகை பணியாளர் தேர்வு (எஸ்எஸ்சி - எம்டிஎஸ்), ஒருங்கிணைந்த மேல்நிலைப் பணியாளர் தேர்வு (சிஹெச்எஸ்எல்இ) ஆகியவற்றை தமிழ் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் எழுத மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
 இது குறித்து மத்திய பணியாளர் பயிற்சி, பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
 மத்திய அலுவலர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளின் திட்டம், பாடத் திட்டங்கள் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நிபுணர் குழு, எஸ்எஸ்சி-யின் கடைநிலையில் உள்ள "சி 'பிரிவு பணியாளர்கள் அந்தந்த மாநில மொழி பேசுபவர்களாக இருக்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை வழங்கியது.
 நிபுணர் குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதன்படி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட எஸ்எஸ்சி - எம்டிஎஸ் என்கிற பலவகை பணியாளர் தேர்வு 2022, சிஹெச்எஸ்எல்இ 2022 ஆகியவற்றை 15 மொழிகளில் (ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் 13 மாநில மொழிகள்) நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
 சிஹெச்எஸ்எல்இ தேர்வுக்கான அறிவிப்பு 2023, மே-ஜூன் மாதங்களில் வெளியிடப்படும். எஸ்எஸ்சி - எம்டிஎஸ் தேர்வு தற்போது அனுமதிக்கப்பட்ட பிராந்திய மொழிகளோடு முதல் முறையாக மே 2-ஆம் தேதி தொடங்க உள்ளது.
 பிரதமர் நரேந்திர மோடி கருத்துரையின்படி, அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்பதோடு, மொழித் தடையால் எவரது உரிமையும் பறிக்கப்படும் நிலை ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த வரலாற்று முக்கியத்துவமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தங்கள் தாய்மொழியில் தேர்வில் பங்கேற்கும் லட்சக்கணக்கானவர்களின் விருப்பம் நிறைவேற்றப்படுகிறது என்றார் அமைச்சர்.
 மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறையின் ஒப்புதலைத் தொடர்ந்து, இந்தத் தேர்வுகளை ஹிந்தி, ஆங்கிலத்துடன் சேர்த்து தமிழ், வங்கம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, உருது, கொங்கணி உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் எழுதலாம்.
 எம்டிஎஸ் என்கிற பலவகை அலுவலர் தேர்வானது ஹவில்தார், அலுவலக உதவியாளர் (பியூன்), தொலைபேசி ஆபரேட்டர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கும், சிஎச்எஸ்எல்இ தேர்வானது பிரிவு எழுத்தர், இளநிலை செயலக உதவியாளர், அஞ்சல் உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் போன்ற பணியிடங்களுக்கும் நடத்தப்படுகிறது.
 மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப் ) காவலர்கள் (பொதுப் பணி) தேர்வை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்துடன் கூடுதலாக 13 பிராந்திய மொழிகளில் நடத்த உள்துறை அமைச்சகம் ஏப். 15-ஆம் தேதி ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.