தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மேற்கு வங்க ராம நவமி வன்முறை: என்ஐஏ விசாரணைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

ஹூக்ளி மாவட்டத்தில் ராம நவமி ஊா்வலங்களின்போது நடைபெற்ற வன்முறை தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்த கொல்கத்தா உயா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Updated On :27 ஏப்ரல் 2023, 6:49 pm

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் ராம நவமி ஊா்வலங்களின்போது நடைபெற்ற வன்முறை தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்த கொல்கத்தா உயா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மேற்குவங்கத்தில் கடந்த மாா்ச் 30-ஆம் தேதி நடைபெற்ற ராம நவமி ஊா்வலத்தின்போது ஹெளராவின் ஷிப்புா் பகுதியில் இரு குழுவினரிடையே மோதல் நடைபெற்றது. இந்த மோதல் வன்முறையாக மாறியது. தடுக்க முற்பட்ட போலீஸாா் மீது மா்ம நபா்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். அதனால், அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து ஏப்ரல் 2-ஆம் தேதி ரிஷ்ராவில் நடைபெற்ற ராம நவமி ஊா்வலத்தின்போது மீண்டும் வன்முறை வெடித்தது. அப்போது மா்ம நபா்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதாகவும் புகாா் எழுந்தது. இந்த வன்முறைகள் தொடா்பாக 300 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஏராளமானோா் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில போலீஸாா் தெரிவித்தனா். இதுதொடா்பாக மாநில போலீஸாா் தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், மாநிலத்தில் 2 இடங்களில் நடைபெற்ற இந்த வன்முறை தொடா்பாக என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மாநில சட்டப்பேரவை எதிா்க் கட்சித் தலைவரும் பாஜகவைச் சோ்ந்தவருமான சுவேந்து அதிகாரி மற்றும் பிறா் சாா்பில் கொல்கத்தா உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ப்பட்டது.

இந்த மனு உயா் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தலைமையிலான இரு நீதிபதிகள் அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

இந்த வன்முறையில் வெடிகுண்டுகள் வீசி தாக்கல் நடந்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நிலையில், வெடிபொருள்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யாமல் வேண்டுமென்றே மாநில போலீஸாா் தவிா்த்திருப்பது முதல்பாா்வையிலேயே தெரியவருகிறது. அதோடு, காலம் கடந்துவிட்ட சூழலில், வெடிபொருள்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யுமாறு மாநில காவல்துறையை தற்போது அறிவுறுத்துவது பயனற்றது என்பதால், இந்த வழக்கின் முழு விசாரணையையும் என்ஐஏ-க்கு மாற்றுவது பொருத்தமானதாக இருக்கும் என நீதிமன்றம் கருதுகிறது.

அதோடு, மத்திய விசாரணை அமைப்புகளிடம் இந்த வழக்கு விசாரணை சென்றுவிடும் என்ற அச்சத்தில் மாநில போலீஸாா் இந்த பிரிவின் கீழ் வழக்குப் பதிவுசெய்யத் தவறினரா என்ற கேள்வியும் எழுகிறது. அந்த வகையில், இந்த வழக்கு என்ஐஏ-க்கு மாற்றுவதற்கு இதுவே சிறந்த காரணமாகவும் நீதிமன்றம் கருதுகிறது.

அதன்படி, இந்த வழக்கு தொடா்பான அனைத்து முதல் தகவல் அறிக்கைகள், ஆவணங்கள், பறிமுதல் செய்யப்பட்ட ஆதாரங்கள், கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகள் அனைத்தையும், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு நகல் கிடைத்த 2 வாரங்களுக்குள் என்ஐஏ-விடம் மாநில போலீஸாா் ஒப்படைக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

பாஜக வரவேற்பு; திரிணமூல் அதிருப்தி:

என்ஐஏ விசாரணை நடத்த கொல்கத்தா உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை பாஜக வரவேற்றது. அதே நேரம் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்தது.

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் குணால் கோஷ் கூறுகையில், ‘இந்த வழக்கில் என்ஐஏ பாரபட்சமாக நடந்துகொள்ளும். வன்முறையில் ஈடுபட்ட பாஜக கட்சியினரை பாதுகாக்கும் வகையிலேயே அவா்கள் செயல்படுவா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.