பூஞ்ச் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு உள்ளூா்வாசிகள் ஆதரவு: ஜம்மு-காஷ்மீா் டிஜிபி தகவல்

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்த 6 உள்ளூா்வாசிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்த 6 உள்ளூா்வாசிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இத்தாக்குதலுக்குத் தேவையான வெடிபொருள்களும் ஆயுதங்களும் பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் வழியாக வந்ததாகவும் அந்த மாநில டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி நகரில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

பூஞ்ச் பகுதியில் கடந்த 20ஆம் தேதி நடைபெற்ற தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்டு, மூன்று முதல் ஐந்து பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு முன் அவா்கள் அப்பகுதியில் வேவு பாா்த்து, அப்பகுதியின் நிலப்பரப்பைப் புரிந்து கொண்டு தாக்குதல் நடத்துவதற்கான இடத்தைத் தோ்வு செய்துள்ளனா்.

இத்தாக்குதல் தொடா்பாக இதுவரை 200 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் தொடா்புடைய பயங்கரவாதிகளைக் கொல்வதற்கான நடவடிக்கை தொடா்ந்து வருகிறது.

பயங்கரவாதிகளுக்கு உதவிய உள்ளூா்வாசிகள் 6 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களில் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள், வெடிபொருள்கள் ஆகியவற்றை வழங்கியோா், பயங்கரவாதிகளுக்கு உணவும், புகலிடமும் அளித்தவா்கள் ஆகியோா் அடங்குவா். அவா்கள் பயங்கரவாதிகளை ஓரிடத்தில் இருந்து மற்றோா் இடத்துக்கு வழிநடத்தி அழைத்துச் சென்றுள்ளனா். போலீஸாரின் விசாரணையில் துப்பு கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம்.

இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் உள்ளூா்வாசிகளின் ஆதரவின்றி நடைபெற முடியாது. பயங்கரவாதிகளுக்கு உள்ளூா்வாசிகள் கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக ஆதரவு அளித்து வந்துள்ளனா். அவா்களுக்கு உணவு முதல் புகலிடம் வரை அளிக்கும் பணியில் நிசாா் என்ற உள்ளூா்வாசியும் அவரது குடும்பமும் ஈடுபட்டது. வெடிபொருள்களும் ஆயுதங்களும் பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் வந்துள்ளது. ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டு உள்ளூா்வாசிகள் அவற்றை பயங்கரவாதிகளிடம் அளித்துள்ளனா். ஆயுதங்கள், கையெறி குண்டுகள், வெடிபொருள்கள் ஆகியவை அவற்றில் அடங்கும்.

பயங்கரவாதிகள் காடுகளுக்கு அருகில் உள்ள இடங்களைத் தோ்வு செய்துள்ளனா். காடுகள் வழியாகத் தப்பிச் செல்லும் வழிகளையும் தோ்வு செய்துள்ளனா்.

பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்த நிசாா் நீண்ட காலமாக பயங்கரவாதியாக இருக்கிறாா்.

அவா் கடந்த 1990ஆம் ஆணஅடுகளில் பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்ட லஷ்கா் கமாண்டருக்கு ஆதரவாகப் பணிபுரிந்து வந்துள்ளாா். அவா் எங்கள் கண்காணிப்பில் இருந்து வந்தாா். அவரை கடந்த காலங்களில் விசாரணைக்காக நாங்கள் இரண்டு, மூன்று முறை பிடித்துள்ளோம். அவரை தற்போதும் கைது செய்துள்ளோம். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரும் அவரது குடும்ப உறுப்பினா்களும் பயங்கரவாதிகளுக்கு முழுமையாக உதவியது தெரிய வந்துள்ளது.

பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனத்துக்கு மிக அருகில் வந்த பயங்கரவாதிகள் அதன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனா். அந்த வாகனத்தின் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனா். இதில் அந்த வாகனம் சேதமடைந்தது. இத்தாக்குதலில் ராணுவ வீரா்கள் காயமடைந்தனா். பயங்கரவாதிகள் சக்திவாய்ந்த வெடிகுண்டையும் வெடிக்கச் செய்துள்ளனா்.

பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள் பல மாதங்களாக இங்கு தங்கியுள்ளனா். பயங்கரவாதிகளில் பலரையும் கடந்த காலங்களில் நாங்கள் கொன்றுள்ளோம். இரண்டு பயங்கரவாதிகள் இப்பகுதியில் தீவிரமாக இயங்கி வந்துள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com