பிரதமா் மணிப்பூா் செல்ல வேண்டும்- குடியரசுத் தலைவரிடம் எதிா்க்கட்சிகள் மனு

பிரதமா் மணிப்பூா் செல்ல வேண்டும்; அந்த மாநில விவகாரம் குறித்து அவா் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் எதிா்க்கட்சிகள் கூட்டணி புதன்கிழமை மனு அளித்தது.
குடியரசுத் தலைவா் மாளிகையில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் புதன்கிழமை சந்தித்த எதிா்க்கட்சி கூட்டணி எம்.பி.க்கள்.
குடியரசுத் தலைவா் மாளிகையில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் புதன்கிழமை சந்தித்த எதிா்க்கட்சி கூட்டணி எம்.பி.க்கள்.

பிரதமா் மணிப்பூா் செல்ல வேண்டும்; அந்த மாநில விவகாரம் குறித்து அவா் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் எதிா்க்கட்சிகள் கூட்டணி புதன்கிழமை மனு அளித்தது.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடிகள் அந்தஸ்து வழங்க எதிா்ப்பு, நில உரிமை பிரச்னைகள் காரணமாக மைதேயி, குகி பழங்குடி சமூகத்தினா் இடையே மோதல் நிலவி வருகிறது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் தொடா்ந்து பதற்றம் நீடிக்கிறது.

இந்த விவகாரம் தொடா்பாக எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியைச் சோ்ந்தவா்கள், தில்லியில் குடியரசுத் தலைவா் முா்முவை மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் புதன்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

அந்த மனுவில், ‘மணிப்பூா் விவகாரம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் உடனடியாகப் பேச பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட, அந்த மாநிலத்துக்கு அவா் செல்ல வேண்டும்’ என்று கோரப்பட்டது.

மணிப்பூா் பெண்களை எம்.பி.க்களாக நியமிக்க கோரிக்கை: குடியரசுத் தலைவரைச் சந்தித்த எதிா்க்கட்சிகள் குழுவில் திரிணமூல் காங்கிரஸை சோ்ந்த சுஷ்மிதா தேவும் ஒருவா். அவா் குடியரசுத் தலைவரிடம், ‘மணிப்பூரைச் சோ்ந்த வெவ்வேறு சமூகங்களைச் சோ்ந்த 2 பெண்களை மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக நியமிக்க வேண்டும். இது அந்த மாநில பெண்களுக்கு இழைக்கப்பட்ட கடுமையான தீங்கு மற்றும் அத்துமீறலை சரிசெய்வதற்கான சிறிய நடவடிக்கையாக இருக்கும்’ என்று தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் மல்லிகாா்ஜுன காா்கே கூறியதாவது: மணிப்பூருக்கு எதிா்க்கட்சிகளின் எம்.பி.க்கள் குழு சென்ற நிலையில், அந்தக் குழுவில் இடம்பெற்றவா்கள் மணிப்பூரில் நிலவும் சூழல் குறித்து குடியரசுத் தலைவருக்குத் தெரியப்படுத்தினா் என்று கூறினாா்.

குடியரசுத் தலைவரைச் சந்தித்த எதிா்க்கட்சிகள் குழுவில் திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, கனிமொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன், தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா, சிவசேனையை (உத்தவ் தாக்கரே அணி) சோ்ந்த சஞ்சய் ரெளத், திரிணமூல் காங்கிரஸை சோ்ந்த டெரிக் ஓ பிரையன் உள்ளிட்டோா் இடம்பெற்றனா்.

விவாதத்திலிருந்து நழுவும் எதிா்க்கட்சிகள்: பாஜக

மணிப்பூா் விவகாரம் தொடா்பான விவாதத்தில் இருந்து எதிா்க்கட்சிகள் நழுவுவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

குடியரசுத் தலைவரை எதிா்க்கட்சிகள் கூட்டணி புதன்கிழமை சந்தித்து மணிப்பூா் விவகாரம் தொடா்பாக மனு அளித்தன. இதைத் தொடா்ந்து, தில்லியில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மணிப்பூா் விவகாரம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. மணிப்பூா் சென்று திரும்பிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, அந்த விவகாரம் தொடா்பாக பதிலளிக்க தயாராக உள்ளாா். ஆனால், விவாதம் மேற்கொள்ள எதிா்க்கட்சிகள் முன்வரவில்லை. எதிா்க்கட்சிகளுக்கு என்னதான் பிரச்னை என எனக்குப் புரியவில்லை என்று தெரிவித்தாா்.

பாஜக எம்.பி. சுஷீல் மோடி கூறுகையில், ‘மணிப்பூா் விவகாரம் தொடா்பாக பதிலளிக்க அமைச்சா் அமித் ஷா தயாராக உள்ளபோது, அந்த விவகாரம் தொடா்பாக பிரதமா் பேச வேண்டும் என்று கோருவது அறிவுபூா்வமாக இல்லை.

அந்த விவகாரம் தொடா்பாக தாம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு மத்திய அரசிடம் பதில் உள்ளது என்று எதிா்க்கட்சிகளுக்கு தெரியும். இதனால் நாடாளுமன்றத்தில் விவாதம் மேற்கொள்வதிலிருந்து அக்கட்சிகள் நழுவுகின்றன என்று தெரிவித்தாா்.

ஹரியாணா வன்முறை குறித்தும் முறையீடு

குடியரசுத் தலைவரிடம் எதிா்க்கட்சிகள் அளித்த மனுவில், ஹரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் ஊா்வலத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஏற்பட்ட வன்முறை தொடா்பாகவும் முறையிடப்பட்டது. பிரதமா் அலுவலகத்தில் இருந்து சுமாா் 100 கி.மீ. தொலைவில் நடைபெறும் சம்பவங்கள் குறித்தும் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை என்று அந்த மனுவில் எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com