ராகுலின் சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு: உச்சநீதிமன்றம்

ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டு கால சிறைத்தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டு கால சிறைத்தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. 

2019, மக்களவைத் தோ்தலையொட்டி கா்நாடகத்தில் பிரசாரத்தில் பேசிய ராகுல், மோடி சமூகத்தினரை இழிவுபடுத்தியதாகக் கூறி குஜராத் பாஜக எம்எல்ஏ பூா்ணேஷ் மோடி வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கை விசாரித்த சூரத் விசாரணை நீதிமன்றம், ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த மாா்ச் 23-ஆம் தேதி தீா்ப்பளித்தது. அதன் அடிப்படையில், மக்களவை உறுப்பினா் பதவியிலிருந்து ராகுல் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். 

சூரத் நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்யக் கோரி ராகுல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை குஜராத் நீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர். கவாய், நரசிம்மா, சஞ்சய் கிஷன் கவுல் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.

விசாரணை முடிவடைந்த நிலையில், ராகுல் காந்தியின் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

மேலும், எதன் அடிப்படையில் ராகுலுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது? ஒருநாள் குறைவாக தண்டனை வழங்கியிருந்தால்கூட அவரது மக்களவை பதவி தப்பியிருக்கும், எம்.பி. பதவியில் தொடர்ந்திருப்பார் என்று கூறிய நீதிபதிகள், ராகுலுக்கு அதிகபட்ச தண்டனை விதித்தது ஏன் என கீழமை நீதிமன்ற நீதிபதிகள் விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். 

பொது வாழ்வில் ஈடுபடுபவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதன் மூலமாக ராகுல் காந்தி குற்றவாளி என்ற கீழமை நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது, ராகுலின் 2 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது. மேலும் அவர் எம்.பி.யாக தொடர்கிறார், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ராகுல் பங்கேற்க நீதிமன்றம் வழிவகை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com