மிகவும் முக்கியமான கட்டத்தில் சந்திரயான்-3: இஸ்ரோ தலைவர்
நிலவிலிருந்து 100 மீட்டர் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திராயன்-3 செல்வதுதான் மிகவும் முக்கியமான கட்டம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.


சென்னை: நிலவிலிருந்து 100 மீட்டர் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திராயன்-3 செல்வதுதான் மிகவும் முக்கியமான கட்டம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
நிலவிலிருந்து 100 மீட்டர் தொலைவு வரை சந்திரயான்-3 விண்கலத்துக்கு எந்த சிக்கலும் ஏற்படாது. நிலவுக்கு 100 மீட்டர் தொலைவுக்குள் விண்கலம் செல்வதுதான் மிகவும் முக்கியமான கட்டம். நிலவு எந்த தொலைவில் இருக்கிறது என்பதை அளவிடுவதில்தான் இருக்கிறது. அதை சரியாக செய்துவிட்டால், அடுத்தடுத்து சரியாக நடந்துவிடும் என்றும் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
தற்போது, சந்திரயான் விண்கலத்தை தரையிறக்குவதில் மிகவும் கவனமாக செயல்படுவோம். விண்கலத்தில் திட்டமிட்டபடி மாற்றங்கள் நடக்கின்றன. இந்த முறை நல்ல முறையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நிச்சயம் இது வெற்றிபெறும் என்று நம்புகிறோம் என்றும் அவர் கூறினார்.
நிலவை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் நிலவின் சுற்று வட்டப் பாதைக்குள் நுழைந்து, புகைப்படங்களை எடுத்து அனுப்பியது. அதனை இஸ்ரோ இன்று வெளியிட்டிருந்தது.
நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை ரூ. 615 கோடியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது, பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தை இயக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் சந்திரயானை நிலவுக்கு அருகே கொண்டு செல்லும் விதமாக அதன் புவி நீள்வட்ட சுற்றுப்பாதைத் தொலைவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
தொடா்ந்து, ஆகஸ்ட் 1-ஆம் தேதி சந்திரயான் புவி ஈா்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு நிலவை நோக்கி செல்லும்படி அதன் பயணம் மாற்றியமைக்கப்பட்டது. 5 நாள்கள் பயணத்துக்குப் பிறகு நிலவுக்கு அருகே விண்கலம் சனிக்கிழமை சென்றது. இதையடுத்து விண்கலம் நிலவின் வட்ட சுற்றுப் பாதைக்குள் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.
சந்திரயான் - 3 விண்கலத்தில் உள்ள இயந்திரம் இயக்கப்பட்டு, அது நிலவின் வட்ட சுற்றுப் பாதைக்குள் உந்தி தள்ளப்பட்டது. தொடா்ந்து, நிலவின் ஈா்ப்பு விசையை உணா்வதாக விண்கலம் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் அனுப்பியது. அடுத்தகட்டமாக நிலவின் சுற்றுப்பாதை தொலைவு ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் குறைக்கப்பட்டது. தொடா்ந்து, சுற்றுப்பாதையின் தொலைவை படிப்படியாகக் குறைத்து ஆகஸ்ட் 23-ஆம் தேதி விண்கலம் நிலவில் மெதுவாக தரையிறக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி செயல்பட்டால் ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை 5.47 மணிக்கு சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...