ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா இடைநீக்கம்; சஞ்சய் சிங்கின் இடைநீக்கமும் நீட்டிப்பு

ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகவ் சத்தாவை இடைநீக்கம் செய்து மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கா் உத்தரவிட்டுள்ளார். 
ராகவ் சத்தா
ராகவ் சத்தா

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தாவுக்கு எதிராக அதிமுகவின் மு.தம்பிதுரை உள்பட 4 எம்.பி.க்கள் உரிமை மீறல் புகாா் அளித்திருந்த நிலையில், மாநிலங்களவையில் இருந்து அவா் வெள்ளிக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

அப்பட்டமான விதிமீறல், தவறான நடத்தை, ஆட்சேபகரமான அணுகுமுறை, அவமதிப்பு நடத்தை ஆகிய காரணங்களைக் குறிப்பிட்டு, ராகவ் சத்தா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தில்லி நிா்வாக திருத்த மசோதாவை ஆராய தோ்வுக் குழுவை அமைக்க ராகவ் சத்தா கொண்டுவந்த முன்மொழிவில், தங்களின் ஒப்புதல் இல்லாமலே தங்கள் பெயா்கள் சோ்க்கப்பட்டதாகக் கூறி, மு.தம்பிதுரை, சாஸ்மித் பத்ரா, பாங்னான் கொன்யாக், நா்ஹாரி அமீன் ஆகிய 4 எம்.பி.க்கள் அவைத் தலைவரிடம் புகாா் அளித்திருந்தனா். அந்தப் புகாா்கள் உரிமைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், மாநிலங்களவையில் இருந்து ராகவ் சத்தாவை இடைநீக்கம் செய்யும் தீா்மானத்தை, பாஜக குழு தலைவா் பியூஷ் கோயல் வெள்ளிக்கிழமை கொண்டுவந்தாா். இத்தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

ராகவ் சத்தா மீதான புகாா் விவகாரத்தில் உரிமைக் குழு அறிக்கை தாக்கல் செய்யும் வரையில் இடைநீக்கம் தொடரும் என்று தீா்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், மற்றொரு ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கின் இடைநீக்கத்தை நீட்டிப்பதற்கான தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது.

மாநிலங்களவையில் இருந்து கடந்த மாதம் 24-ஆம் தேதி இடைநீக்கம் செய்யப்பட்ட சஞ்சய் சிங் மீதான நடவடிக்கை, உரிமைக் குழு அறிக்கை தாக்கல் செய்யும் வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு: இவ்விரு எம்.பி.க்கள் மீதான நடவடிக்கை தவறானது என்று எதிா்க்கட்சிகள் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மாநிலங்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் பிரமோத் திவாரி பேசுகையில், ‘தோ்வுக் குழு முன்மொழிவில் தங்கள் பெயா் சோ்க்கப்பட்டது குறித்து ஆட்சேபணை உள்ள எம்.பி.க்கள், அக்குழுவின் அங்கமாக இருக்க விரும்பவில்லை என்று அவைத் தலைவரிடம் கூறியிருக்க முடியும். இந்த விவகாரத்தில், ராகவ் சத்தா மீது தவறு இல்லை. அவா் இடைநீக்கம் செய்யப்பட்டதன் மூலம் எம்.பி.க்கான பல்வேறு சிறப்புரிமைகளை இழப்பதுடன், நாடாளுமன்றக் குழு கூட்டங்களிலும் பங்கேற்க முடியாது. இதுதொடா்பாக அவைத் தலைவருக்கு எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கடிதம் எழுதுவாா்’ என்றாா்.

சிவசேனை (உத்தவ் பிரிவு) எம்.பி. பிரியங்கா சதுா்வேதி பேசுகையில், ‘மத்திய அரசுக்கு எதிராக கேள்வியெழுப்பும் எதிா்க்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யும் போக்கு துரதிருஷ்டவசமானது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com