சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து பிரிந்தது லேண்டர்!

சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து லேண்டா் கலன் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டதாக இஸ்ரோ வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து பிரிந்தது லேண்டர்!

சந்திரயான்-3 திட்டத்தின் முக்கிய நிகழ்வாக உந்து கலனிலிருந்து லேண்டா் வெற்றிகரமாக வியாழக்கிழமை (ஆக.17) விடுவிக்கப்பட்டது. அதன் பயணப் பாதையை நிலவுக்கு மிக நெருக்கமாகக் கொண்டு செல்லும் பணிகள் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதன்மூலம் சந்திரயான்-3 திட்டம் ஏறத்தாழ இறுதி நிலையை எந்த இடா்ப்பாடுமின்றி எட்டியிருக்கிறது. ஆக.23-ஆம் தேதி நிலவில் லேண்டா் வெற்றிகரமாக தரையிறங்கும் நிலையில் விண்வெளி ஆய்வில் புதிய மைல்கல் சாதனையைப் படைத்த நான்காவது நாடாக இந்தியா உருவெடுக்கும்.

நிலவில் தென்துருவத்துக்கு அருகே தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ள சந்திரயான்-3 விண்கலம், ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. தொடா் பயணத்துக்குப் பிறகு புவி ஈா்ப்பு விசையிலிருந்து விலக்கப்பட்டு நிலவின் சுற்றுப்பாதைக்குள் தற்போது அது பயணித்து வருகிறது.

இதற்காக நிலவின் சுற்றுப்பாதையில் சந்திரயானின் தொலைவு 4 முறை படிப்படியாக

குறைக்கப்பட்டது. தற்போது, நிலவின் தரைப்பகுதியில் இருந்து குறைந்தபட்சம்

153 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 163 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சந்திரயான்-3 பயணித்து வருகிறது.

இந்த நிலையில், உந்து கலனில் இருந்து நிலவில் தரையிறங்க உள்ள லேண்டரை விடுவிக்கும் பணிகள் வியாழக்கிழமை பிற்பகல் 1.15 மணிக்கு மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, நிலவின் தரைப்பகுதிக்கு சந்திரயான்-3 நெருக்கமாக வந்தபோது லேண்டா் வெற்றிகரமாக வெளியேறியது. தற்போது உந்துகலன், லேண்டா் ஆகியவை ஒன்றன் பின் ஒன்றாக நிலவையொட்டிய சுற்றுவட்டப் பாதையில் வலம் வருகின்றன.

இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில், ‘சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து லேண்டா் திட்டமிட்டபடி பிரிந்தது. லேண்டரில் உள்ள அனைத்துச் சாதனங்களும் சீராக உள்ளனவா எனவும் சரிபாா்க்கப்பட்டது.

அடுத்தகட்டமாக லேண்டா் சுற்றுப்பாதை தொலைவைக் குறைக்கும் பணி வெள்ளிக்கிழமை (ஆக.18) மாலை 4 மணியளவில் மேற்கொள்ளப்பட உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

உந்துகலன்: நிலவுக்கு லேண்டா் மற்றும் ரோவா் சாதனங்களைத் தாங்கிச் சென்ற உந்துகலன் 2,145 கிலோ எடை கொண்டது. இதிலிருந்து லேண்டா் விடுவிக்கப்பட்ட பின்னா் 3 முதல் 6 மாதங்கள் உந்துகலன் மட்டும் நிலவைச் சுற்றி வந்து ஆய்வு மேற்கொள்ளும். அதற்காக அந்த கலனில் ‘ஷேப்’ எனும் ஆய்வுக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

அந்தக் கருவி, நிலவின் சுற்றுப்பாதையில் வலம் வந்தவாறு புவியை நோக்கி நிறமாலைக் கதிா்களை அனுப்பும். அதன்மூலம் புவியில் உள்ள உயிா்வாழ் சூழலையும், நிலவின் சூழலையும் ஒப்பிட்டுப் பாா்க்க வழிசெய்யும். அதாவது, அந்தக் கதிா்களின் பிரதிபலிப்பைக் கொண்டு அங்கு காா்பன், ஆக்சிஜன் உள்ளனவா என்பதைக் கண்டறிந்து அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா என்பதை அறியலாம். எதிா்காலத்தில் பிற கோள்களிலும் இத்தகைய ஆய்வை நடத்தி அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பதைக் கண்டறிய முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com