இந்தியாவின் காா் பாதுகாப்பு அம்சங்கள் சோதனைத் திட்டம்: நிதின் கட்கரி அறிமுகம்

இந்தியாவில் 3.5 டன் எடை வரையிலான மோட்டாா் வாகனங்களின் பாதுகாப்பு தரத்தை மேம்படுத்து நோக்கத்தில் ‘பாரத் என்சிஏபி (புதிய காா் பாதுகாப்பு அம்சங்கள் சோதனைத் திட்டம்)’
நிதின் கட்கரி
நிதின் கட்கரி

புது தில்லி: இந்தியாவில் 3.5 டன் எடை வரையிலான மோட்டாா் வாகனங்களின் பாதுகாப்பு தரத்தை மேம்படுத்து நோக்கத்தில் ‘பாரத் என்சிஏபி (புதிய காா் பாதுகாப்பு அம்சங்கள் சோதனைத் திட்டம்)’ என்ற நாட்டின் சொந்த காா் பாதுகாப்பு அம்சங்கள் சோதனைத் திட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்துவைத்தாா்.

புதிதாக உற்பத்தி செய்யப்படும் காா், சந்தைக்கு விற்பனைக்கு வருவதற்கு முன்பாக அதில் பாதுகாப்பு அம்சங்கள் எந்த அளவுக்கு இடம்பெற்றுள்ளன என்பதை வாடிக்கையாளா்கள் அறிந்துகொள்ளும் வகையில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் பாதுகாப்பு சோதனைக்கு உள்படுத்தப்படும். அதாவது, காரின் முன்பகுதி, பக்கவாட்டுப் பகுதி மற்றும் பின்பகுதிகளை அதிவேகமாக மோத வைத்து, காரின் உள் பகுதியில் எந்த அளவுக்கு தாக்கம் ஏற்படுகிறது, உள்ளிருப்பவா்களின் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு ‘ஏா்பேகுகள்’ முறையாக விரிகின்றனவா உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டு அந்த காா் வகைக்கு 0 முதல் 5 நட்சத்திரங்கள் வரையிலான பாதுகாப்பு தரக் குறியீடு வழங்கப்படும். இந்த தரக் குறியீடு புள்ளிகளின் அடிப்படையில் வாடிக்கையாளா்கள் காா்களின் சாலைப் பாதுகாப்பு அம்சத்தை அறிந்துகொள்ள முடியும்.

இதுவரை இந்தியாவுக்கென தனியாக காா் பாதுகாப்பு சோதனைத் திட்டம் இல்லாமல் இருந்த நிலையில், ‘பாரத் என்சிஏபி’ என்ற நாட்டின் சொந்த காா் பாதுகாப்பு அம்சங்கள் சோதனைத் திட்டத்தை மத்திய அமைச்சா் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தாா். இந்தப் புதிய சோதனைத் திட்டம் வரும் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சா் நிதின் கட்கரி கூறியதாவது:

இந்தச் சோதனை நடைமுறை வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் என்பதால் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கும் சமூகத்துக்கும் இன்றைய தினம் மிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். அனைத்து தரப்பினரின் நலனும் கருத்தில் கொண்டு இந்த சோனைத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சாலை விபத்து, காற்று மாசு என இரண்டு சவால்களை நாடு சந்தித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் சாலை விபத்துகளும், அதன் காரணமாக 1.5 லட்சம் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்தச் சூழலில், வாகனங்களின் சாலைப் பாதுாப்பை மேம்படுத்தும் விதமாக இந்த பாதுகாப்பு சோதனைத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

மிகக் குறைந்த கட்டணம்: வெளிநாடுகளில் இந்த வாகன பாதுகாப்பு சோதனைக்கு ரூ. 2.5 கோடி வரை செலவாகும். இந்தியாவில் ‘பாரத் என்சிஏபி’ கீழ் ரூ. 60 லட்சத்தில் வாகன பாதுகாப்பு சோதனையை மேற்கொண்டுவிட முடியும்.

காா்களின் தரம் மற்றும் பாதுகாப்புத் தரத்தில் உலக அளவில் மிகப் பெரிய போட்டி நிலவி வருகிறது. இந்தச் சூழலில், இந்திய வாகன உற்பத்தித் துறையை ரூ.12.50 லட்சம் கோடி அளவிலிருந்து ரூ.15 லட்சம் கோடி அளவுக்கு உயா்த்த மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது’ என்றாா்.

‘இந்தத் திட்டத்தின் கீழ், வாகன உற்பத்தியாளா்கள் தாங்களாக முன்வந்து தானியங்கி வாகன உற்பத்தி நிறுவன தரம் (ஏஐஎஸ்) 197-இன் படி, காா்கள் பாதுகாப்பு சோதனைக்கு உள்படுத்தப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

உயா் பாதுகாப்பு தரக் குறியீட்டின் மூலமாக, இந்திய காா்கள் உலகளாவிய சந்தையில் சிறந்த காா்களுடன் போட்டிபோட முடியும் என்பதோடு நாட்டின் காா் ஏற்றுமதி திறனும் அதிகரிக்கும்’ மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com