பஞ்சாங்கத்தின்படி செயல்படுமாறு காவலர்களுக்கு அறிவுறுத்திய டிஜிபி

உத்தரப்பிரதேச காவல்துறை டிஜிபி, காவலர்களுக்கு பஞ்சாங்கத்தை பின்பற்றுமாறு அறிவுறுத்தியிருக்கிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

லக்னௌ: இந்துக்கள் கடைப்பிடிக்கும் பஞ்சாங்கத்தில் கூறப்பட்டிருக்கும் நேரத்தை, பலரும் நல்ல மற்றும் துக்க நிகழ்வுகளை நடத்தும்போது பின்பற்றுவார்கள். ஆனால், உத்தரப்பிரதேச டிஜிபி, காவலர்களுக்கு பஞ்சாங்கத்தை பின்பற்றுமாறு அறிவுறுத்தியிருக்கிறார்.

உத்தரப்பிரதேச காவல்துறை டிஜிபி விஜய குமார், அனைத்து மாவட்ட காவல்துறையினருக்கும் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அமாவாசை நாளில், குற்ற நிகழ்வுகளை தீவிரமாக கண்காணிக்குமாறும், அமாவாசை நாளுக்கு முன்பு, குற்றங்களைத் தடுக்க அதிக முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறும் வலியுறுத்தியிருக்கிறார்.

மேலும் அந்த அறிக்கையில், பொதுவாக குற்றச்சம்பவங்கள் அமாவாசைக்கு ஒரு வாரம் முன்பும், அமாவாசைக்கு ஒரு சில நாள்களுக்கு பின்பே அதிகமாக நிகழும். எனவே, அதற்கேற்ப, மாதந்தோறும் அந்த நாள்களில் காவல்துறை கண்காணிப்பை அதிகரிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

ஆகஸ்ட் 1ஆம் தேதி பௌர்ணமி. அன்றிலிருந்து ஒரு வாரத்துக்கு இரவில் வெளிச்சம் அதிகம் இருக்கும். குற்றவாளிகள் நடமாட்டம் குறைவாக இருக்கும். ஆகஸ்ட் 16ஆம் தேதி அமாவாசை. எனவே, அதற்கு ஒரு வாரம் முன்னதாக வெளிச்சம் குறையும். அடுத்த 3 நாள்களுக்கும் வெளிச்சம் குறைவாக இருக்கும்.

எனவே, அமாவாசை வரும் நாள்களைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப காவல்துறையினர் குற்றங்களைத் தடுத்தல், கண்காணிப்பை அதிகரித்தல் போன்றவற்றில் ஈடுபடுமாறு அறிவித்திருக்கிறார்.

இதோடு நின்றுவிடாமல், அவர் தரப்பில் பொதுமக்களுக்கும் ஒரு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதில், மக்களும், அமாவாசை போன்ற நாள்களுக்கு முன்பு ஒரு வாரமும், பின்பு ஒரு சில நாள்களும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறார். 

மிகப்பெரிய கொலை மற்றும் கொள்ளை கும்பல்கள், அமாவாசையை தேர்ந்தெடுத்து குற்றங்களில் ஈடுபடுவார்கள் என்றும் டிஜிபி தெரிவித்துள்ளார்.

இது குறித்து முன்னாள் காவல்துறை அதிகாரிகள் கருத்துக் கூறுகையில், இது மிகவும் பழமையான நடைமுறை. முன்பெல்லாம் அமாவாசையை அடிப்படையாகக் கொண்டு காவல்துறை சார்பில் மாதந்தோறும் காலண்டர் வெளியிடப்படும். அமாவாசை நாள்களில் காவலர்களுக்கு விடுமுறை வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com