ஸ்மைல் ப்ளீஸ்.. விக்ரம் லேண்டரை படம் எடுத்த ரோவர்

பூமியிலிருந்து நிலவுக்கு சுமந்துகொண்டு வந்து, நிலவில் தடம் பதிக்க உதவிய விக்ரம் லேண்டரை, பிரக்யான் ரோவர் புகைப்படம் எடுத்து இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.
ஸ்மைல் ப்ளீஸ்.. விக்ரம் லேண்டரை படம் எடுத்த ரோவர்

பூமியிலிருந்து தன்னை இந்த நிலவுக்கு சுமந்துகொண்டு வந்து, நிலவில் தடம் பதிக்க உதவிய விக்ரம் லேண்டரை, பிரக்யான் ரோவர் புகைப்படம் எடுத்து இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கும் இஸ்ரோ.. ஸ்மைல் ப்ளீஸ் என்று புகைப்படக் கருவியின் சிறிய புகைப்படத்தை இணைத்து பதிவிட்டுள்ளது மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இது குறித்து இஸ்ரோ வெளியிட்டிருக்கும் பதிவில், 
ஸ்மைல், ப்ளீஸ்!

விக்ரம் லேண்டரை இன்று காலை பிரக்யான் ரோவர் படம் பிடித்துள்ளது.

ரோவரில் அமைந்துள்ள நேவிகேஷன் கேமராவின் மூலம், இந்த மிக அற்புதமான புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் - 3 விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த நேவிகேஷன் கேமராவானது எலக்ட்ரோ-ஆப்டிக்ஸ் சிஸ்டம்ஸ் ஆய்வுக் கூடத்தில் தயாரிக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, நிலவின் மேற்பரப்பில் கந்தகம்(சல்ஃபா்) இருப்பதை சந்திரயான்-3 விண்கலத்தின் ‘பிரக்யான்’ ரோவா் கண்டறிந்துள்ளதாகவும் ஹைட்ரஜனுக்கான தேடல் நடைபெற்று வருவதாகவும் இஸ்ரோ செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தது.

நிலவின் தென்துருவத்தில் ‘பிரக்யான்’ ரோவா் நிலவின் மேற்பரப்பில் தனது ஆய்வுகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில், நிலவின் மேற்பரப்பில் கந்தகம் (சல்ஃபா்) கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட எக்ஸ் (ட்விட்டா்) பதிவில், ‘சந்திரயான்-3 விண்கலத்தின் மூலம் அனுப்பப்பட்ட பிரக்யான் ரோவரில் பொருத்தப்பட்டிருக்கும் ‘லேசரால் தூண்டப்படும் ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவியின் (எல்ஐபிஎஸ்)’ ஆராய்ச்சிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. அதன் மூலம், தென்துருவத்தின் அருகேயுள்ள பகுதியில் கந்தகம் இருப்பது சந்தேகமின்றி உறுதியாகியுள்ளது.

கந்தகம் மட்டுமின்றி எதிா்பாா்த்தப்படியே, அலுமினியம், கால்சியம், இரும்பு, க்ரோமியம், டைடேனியம், மாங்கனீஸ், சிலிக்கான் மற்றும் ஆக்ஸிஜன் போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளன. ஆய்வுத் திட்டத்தின் முக்கிய இலக்கான ஹைட்ரஜன் தேடல் நடந்து வருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பெங்களூரு இஸ்ரோ வளாகத்தில் அமைந்துள்ள மின்-ஒளியியல் அமைப்புக்கான ஆய்வகத்தில் உருவான எல்ஐபிஎஸ் கருவி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com