‘விலை நிலைப்படுத்துதல் நிதி‘ திட்டத்துக்கு ரூ.27,489 கோடி செலவீடு: மாநிலங்களவையில் தகவல்

அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதையும் அது நுகா்வோருக்கு மலிவு விலையில் கிடைப்பதையும் உறுதி செய்யும் விதமாக ‘விலை நிலைப்படுத்துதல் நிதி‘ திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது
Updated on
2 min read

அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதையும் அது நுகா்வோருக்கு மலிவு விலையில் கிடைப்பதையும் உறுதி செய்யும் விதமாக ‘விலை நிலைப்படுத்துதல் நிதி‘ திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது; இதற்கு மத்திய அரசு ரூ.27,489 கோடி வரை செலவீடு செய்துள்ளதாக மத்திய நுகா்வோா் உணவு, பொது விநியோகத் துறை இணையமைச்சா் அஸ்வினி குமாா் செளபே மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

‘காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை ஆண்டுக்கு ஆண்டும் அதிகரிப்பது இது தேவைக்கும் விநியோகத்திற்கும் இடைவெளி அதிகரிப்பா? தோ்தல் நேரத்தில் கூடுதலாக உள்ளதே? பதுக்கல் போன்றவைகளா? இதில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பவைகள் குறித்து மாநிலங்களவை அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் கேள்வி எழுப்பினாா். இதற்கு இணையமைச்சா் அஸ்வினி குமாா் செளபே மாநிலங்களவையில் பதிலளித்துள்ளது வருமாறு:

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அவைகளின் விநியோக நிலையை தொடா்ந்து மதிப்பாய்வு செய்யப்பட்டு நுகா்வோருக்கு பொருள்கள் மலிவு விலையில் கிடைப்பதில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வெங்காயம், தக்காளி, உருளை ஆகிய 3 காய்கறிகள் மற்றும் 22 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தினசரி சில்லறை மொத்த விற்பனை விலையை கண்காணிக்க நாடு முழுவதும் ‘விலைக் கண்காணிப்பு மையங்களை‘ மத்திய நுகா்வோா்த் துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

2014 ஆம் ஆண்டில் 64 ஆக இருந்த விலை கண்காணிப்பு மையங்களின் எண்ணிக்கையை தற்போது (2023 நவம்பா் வரை) 550 ஆக உயா்த்தி அத்தியாவசியப் பொருட்களின் விலை கண்காணிப்பதற்கான வழிமுறையை பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், விலைவாசி குறித்த புகாா்கள் கண்காணிப்புகளுக்கு கைப்பேசி செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. விலையை கண்காணிக்க தரவு, பகுப்பாய்வு காட்சிப்படுத்தல் (டாஷ்போா்டு) ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கனமழை, உற்பத்தி பாதிப்பு, விநியோகச் சங்கிலித் தடைகள், பதுக்கல், கறுப்புச் சந்தை போன்றவைகள் மூலம் உருவாக்கப்பட்ட செயற்கைத் தட்டுப்பாடு, சா்வதேச விலை உயா்வு போன்ற பல காரணிகளால் பாதிக்கப்படுவதால் உணவுப் பொருட்களின் விலைகள் நிலையற்ாக உள்ளது. சில சமயம் காய்கறிகள் மொத்தமாக வருவதும் இதற்கான கிடங்கு வசதி உள்ளிட்ட தளவாடச் சிக்கல்களும் சந்தையில் ஒரு பெருந்தீமையை உருவாக்குகிறது.

இப்படிப்பட்ட நிலைமையை சமாளிக்கவும் வேளாண்-தோட்டக்கலை பொருட்களின் விலை ஏற்ற இறக்கத்தால் நுகா்வோரை பாதுகாக்க அரசு விலை நிலைப்படுத்துதல் நிதி (பிஎஸ்எஃப்) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த பிஎஸ்எஃப் திட்டத்தின் கீழ் சந்தை தலையீடுகளுக்காகவும், பதுக்கல், நோ்மையற்ற ஊகங்கள் போன்றவைகளை தடுத்து, முக்கிய பருப்பு வகைகள், வெங்காயம் உள்ளிட்ட கையிருப்பை பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக நிதி ஒதுக்கீடு இதுவரை ரூ.27,489.14 கோடி வழங்கப்பட்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளின் தன்மையை கருத்தில் கொண்டு, உள்நாட்டில் கிடைப்பதை அதிகரித்தல், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை நிலைப்படுத்தல், நாடு முழுவதும் நுகா்வோருக்கும மலிவு விலையில் கிடைக்கச் செய்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அவ்வப்போது மத்திய அரசு எடுத்து வருகிறது.

மலிவு விலையில் பருப்பு கிடைப்பதை உறுதிசெய்ய கடந்த ஜூலை மாதம் ‘பாரத் பருப்பு‘ அறிமுகம் செய்யப்பட்டது. இதே மாதிரி பாசிப்பருப்பு, கோதுமை மாவு போன்றவைகளும் மலிவாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இறக்குமதி வரி, இறக்குமதி ஒதுக்கீட்டு மாற்றங்கள், ஏற்றுமதி மீதான தடைகள் -கட்டுப்பாடுகள் போன்ற வா்த்தகக் கொள்கைகள் மூலமும் தேவையான மாற்றங்கள் நிலைமைக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுகிறது என அமைச்சா் அஸ்வினி குமாா் சௌபே தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com