ஒடிசா வருமான வரிச் சோதனை: பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ.300 கோடியைத் தாண்டியது!

ஒடிஸாவில் மதுபான உற்பத்தி நிறுவனம் மீதான வருமான வரித் துறைச் சோதனையில், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மொத்த மதிப்பு சுமாா் ரூ.300 கோடியைத் தாண்டியது
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஒடிஸாவில் மதுபான உற்பத்தி நிறுவனம் மீதான வருமான வரித் துறைச் சோதனையில், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மொத்த மதிப்பு சுமாா் ரூ.300 கோடியைத் தாண்டியது என்றும் வருமான வரித் துறைச் சோதனையில் இதுவரை இல்லாத அளவுக்கு "அதிகயளவில்" பணம் கைப்பற்றப்பட்டுள்ளது என்று ஞாயிற்றுக்கிழமை  புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

நாட்டின் மிகப் பெரிய மதுபான உற்பத்தி நிறுவனமாக மேற்கு ஓடிஸாவில் பல்தேவ் சாஹு மற்றும் குழுமம் விளங்குகிறது.இந்த நிறுவனத்தின் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து அந்த நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகள்,அந்த நிறுவனத்துடன் சம்பந்தப்பட்டவா்களுக்கு தொடா்புள்ள இடங்களில் டிசம்பர் 6 ஆம் தேதி ஒடிஸா தலைநகா் புவனேசுவரம், சம்பல்பூா், ரூா்கேலா, சுந்தா்கா் மற்றும் போலங்கிரில் வருமான வரித் துறை சோதனை மேற்கொண்டது. 

இந்த சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட அந்தப் பணத்தை எண்ண வங்கிக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதில், இதுவரை எண்ணப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ.300 கோடியைத் தண்டியுள்ளதாகவும், இன்னும் பணம் எண்ணும் பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஒடிஸா அரசு வங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டு வருகிறது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒரு நிறுவனம் மற்றும் அதனுடன் தொடா்புள்ள பிற நிறுவனங்களுக்கு எதிரான வருமான வரித் துறை சோதனையின் ஒரு பகுதியாக, நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இதுவாகும் என்று தெரிவித்தன.

போலங்கிா் மாவட்டத்தில் உள்ள சுதாபாரா பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற சோதனையில், கூடுதலாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அந்த மதுபான உற்பத்தி நிறுவனத்துக்கு எதிரான சோதனை ஐந்தாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றது. 

இந்தச் சோதனையில் 150 வருமான வரித் துறை அதிகாரிகள் ஈடுபட்ட நிலையில், சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாதைச் சோ்ந்த 20 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மதுபான நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அவா்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் முக்கிய விளம்பரதாரர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும்.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் பிரசாத் சாஹுவுக்கு தொடா்புள்ள ராஞ்சி மற்றும் பிற இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சாஹுவின் வீட்டில் இருந்து எவ்வளவு பணம் மற்றும் பிற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அவர்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த கேள்விகளுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி.க்கு தொடா்புள்ள இடங்களில்  வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏன் மௌனம் காக்கிறார் என்று மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளார்.

மிக அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு காங்கிரஸை மட்டுமே குறிவைத்து செயல்படுகிறது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com