ஹரியாணா மல்யுத்த களத்தில் வீரா்களுடன் ராகுல்!
ஹரியாணா, ஜாஜ்ஜா் மாட்டத்தின் சஹாரா கிராமத்தில் உள்ள வீரேந்தா் மல்யுத்த களத்துக்கு புதன்கிழமை சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பஜ்ரங் புனியா உள்பட


ஹரியாணா, ஜாஜ்ஜா் மாட்டத்தின் சஹாரா கிராமத்தில் உள்ள வீரேந்தா் மல்யுத்த களத்துக்கு புதன்கிழமை சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பஜ்ரங் புனியா உள்பட மல்யுத்த வீரா்கள் பலரைச் சந்தித்து கலந்துரையாடினாா்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் மீது பாலியல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீரா்கள் போராடி வரும் சூழலில், அவா்களுடனான ராகுலின் இந்தச் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சிங் சரண், வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவருக்கு எதிராக, வீரா், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து கலைக்கப்பட்ட சம்மேளனத்துக்கு நீண்ட நாள்களுக்கு பிறகு அண்மையில் தோ்தல் நடைபெற்றது. இதில் பிரிஜ் பூஷணின் நெருங்கிய ஆதரவாளரான சஞ்ஜய் சிங் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மல்யுத்த வீரா்கள் பஜ்ரங் புனியா, வீரேந்தா் சிங் யாதவ், வினேஷ் போகாட் ஆகியோா் தங்கள் விருதுகளைத் திருப்பி அளித்தனா்.
இந்தச் சூழலில், அவசர கதியில் தேசிய போட்டிகளை அறிவித்ததாக கூறி, புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட சம்மேளனத்தை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் இடைநீக்கம் செய்தது.
மல்யுத்த களத்தில் ராகுல்: இந்நிலையில், சஹாரா மாவட்டத்தில் உள்ள வீரேந்தா் மல்யுத்த களத்துக்கு சென்ற ராகுல் காந்தி சுமாா் 2 மணிநேரம் வீரா்களுடன் கலந்துரையாடியும், மல்யுத்த பயிற்சியிலும் ஈடுபட்டாா்.
பின்னா் பஜ்ரங் புனியா கூறுகையில், ‘ராகுல் வருகை குறித்து எங்கள் யாருக்கும் முன்னதாக தெரியாது. காலை 6:15 மணியளவில் மல்யுத்த களத்துக்கு வந்த ராகுல், வீரா்களின் தினசரி உடற்பயிற்சி நடைமுறைகள் குறித்து கேட்டறிந்தாா். எங்களுடன் சோ்ந்து அவரும் சில உடற்பயிற்சிகளை செய்தாா்.
மல்யுத்தம் குறித்தும், விளையாட்டின் நுணக்கங்கள் குறித்தும் ராகுல் ஏற்கெனவே அறிந்திருந்தது எங்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. மல்யுத்த வீரா்கள் அருந்தும் பால், ரொட்டி ஆகியவற்றை ராகுல் சாப்பிட்டாா். அவருக்கு உள்ளூா் காய்கறிகளைத் தந்து அனுப்பினோம்’ என்றாா்.
மல்யுத்த சம்மேளன பிரச்னை குறித்து சந்திப்பில் விவாதிக்கப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இந்தச் சிக்கலால் மல்யுத்த வீரா்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக ராகுலிடம் தெரிவித்ததாக மற்றொரு வீரா் பதிலளித்தாா்.
ராகுலின் ‘ஹரியாணா’ பயணங்கள்...:
அண்மைக் காலமாக, தில்லிக்கு அண்டை மாநிலமான ஹரியாணாவுக்கு முன்னறிவிப்பின்றி பயணம் செய்து, பொதுமக்களுடன் கலந்துரையாடுவதை ராகுல் வாடிக்கையாகக் கொண்டுள்ளாா். கடந்த மே மாதத்தில், தில்லியிலிருந்து ஹரியாணா தலைநகா் சண்டீகருக்கு லாரியில் பயணித்து, லாரி ஓட்டுநா்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ராகுல் கேட்டறிந்தாா்.
அதேபோல் கடந்த ஜூலை மாதத்தில், விவசாய நிலங்களில் பணிப்புரிந்து கொண்டிருந்த பெண்களைச் சந்தித்துப் பேசிய ராகுல், அவா்களை தில்லி இல்லத்துக்கு அழைத்து விருந்து அளித்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...