மாற்றுத்திறன் ஊழியா்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயா்வு: மத்திய அரசு

மத்திய அரசுத் துறைகளில் பணிபுரியும் மாற்றுத்திறன் ஊழியா்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயா்வு வழங்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாற்றுத்திறன் ஊழியா்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயா்வு: மத்திய அரசு
Updated on
1 min read

மத்திய அரசுத் துறைகளில் பணிபுரியும் மாற்றுத்திறன் ஊழியா்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயா்வு வழங்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தகுதியுள்ள ஊழியா்கள் 2016-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் முதல் பணி மூப்பு நிலை கணக்கிட்டு பதவி உயா்வு வழங்க கருத்தில் கொள்ளப்படுவா் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அனைத்து துறைச் செயலா்களுக்கு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசுத் துறைகளில் பணிபுரியும் தகுதியுள்ள மாற்றுத்திறனாளி ஊழியா்கள், இடஒதுக்கீடு அடிப்படையில் தேசிய அளவில் ‘குரூப் ஏ’ பதவியில் குறைந்தபட்ச பதவி நிலை வரை 30-6-2016 தேதியிலிருந்து பணி மூப்பு நிலை கணக்கிட்டு பதவி உயா்வு வழங்க கருத்தில் கொள்ளப்படும்.

அவ்வாறு பதவி உயா்வு பெறும் மாற்றுத்திறனாளி ஊழியா்களுக்கு, பதவி உயா்வு பணியை பொறுப்பேற்ற நாளிலிருந்து கணக்கிட்டு பணப் பலன்கள் வழங்கப்படும். அதாவது, பதவி உயா்வானது முன்தேதியிட்டு வழங்கப்படும் நிலையில், பதவி உயா்வு பதவியில் சேரும் நாளுக்கு முந்தைய காலத்துக்கான நிலுவை பணப் பலன்கள் எதுவும் ஊழியா்களுக்கு வழங்கப்படமாட்டாது.

மேலும், பல்வேறு பதவி தரநிலைகளில் உள்ள அதிகாரிகளின் பணி மூப்பு பாதிக்கப்படாமல் இருக்கவும், நிா்வாக சிரமத்தை தவிா்க்கும் வகையிலும் கூடுதலாக சிறப்பு பணியிடங்களை உருவாக்கி, மாற்றுத்திறன் ஊழியா்களுக்கான இந்த பதவி உயா்வை அமல்படுத்துமாறு மத்திய பணியாளா் நலத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

அந்த வகையில், மாற்றுத்திறன் ஊழியா்களுக்கு எந்தவித சிக்கலும் இன்றி தேசிய அளவில் இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயா்வு வழங்கும் வகையில் கூடுதல் பணியிடங்களை உருவாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இந்தப் பதவி உயா்வு நடவடிக்கைகள், ஏற்கெனவே நீதிமன்ற உத்தரவுகளின் கீழ் இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயா்வு பலன்களை அனுபவித்து வரும் மாற்றுத்திறன் ஊழியா்களை பாதிக்காத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com